7 பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் - போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்
சேலம் அருகே ஓரினச்சேர்க்கை வழக்கில் கைதான ஆட்டோ டிரைவர், 7 பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
சேலம்,
சேலம் மாவட்டம் காகாபாளையம் அடுத்த செல்லியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 42). ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி, மகன் உள்ளனர். இவர், காகாபாளையம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆட்டோ தொழிற்சங்க தலைவராக உள்ளார். இளம்பிள்ளை அருகே ஏகாபுரத்தை சேர்ந்தவர் முருகேசன். கூலித்தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் இளம்பிள்ளை பஸ் நிலையத்தில் உள்ள கழிவறைக்கு சென்றார்.
அப்போது, அங்கு பின்தொடர்ந்து வந்த மோகன்ராஜ், அவரை ஓரினசேர்க்கைக்கு அழைத்துள்ளார். அதற்கு முருகேசன் மறுப்பு தெரிவித்ததால் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் முருகேசன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் மோகன்ராஜை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதனிடையே, கைதான ஆட்டோ டிரைவர் மோகன்ராஜ் பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகியுள்ளது. அதாவது, தனது ஆட்டோவில் பயணம் செய்த ஒரு பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த பெண்ணிடம் நைசாக பேசி வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளதாகவும், அங்கு வைத்து அந்த பெண்ணுடன் மோகன்ராஜ் உல்லாசமாக இருந்து அதனை வீடியோ எடுத்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அந்த ஆபாச வீடியோவை காட்டி பலமுறை அந்த பெண்ணை மிரட்டி படுக்கைக்கு அழைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. பெண்ணை மிரட்டி உல்லாசமாக இருக்கும் வீடியோ தற்போது வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஒரு கல்லூரி மாணவி உள்பட 7 பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்த வீடியோக்கள் ஆட்டோ டிரைவர் மோகன்ராஜின் செல்போனில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
காகாபாளையம் பஸ் நிறுத்தத்தில் இறங்கும் பெண்கள் அங்கு நிற்கும் ஆட்டோக்களில் வீடு திரும்புவார்கள். அப்படி மோகன்ராஜ் ஆட்டோவில் ஏறும் பெண்களிடம் நைசாக பேச்சு கொடுத்து அவர்களின் குடும்ப சூழ்நிலையை கேட்டு தெரிந்து கொள்வார். பின்னர் அவர்களுக்கு பணம் தேவைப்பட்டால் அதற்கு ஏற்பாடு செய்வதாக கூறி பணத்தை கொடுத்து அந்த பெண்களின் மனதை மாற்றிவிடுவாராம். இதையடுத்து தன்னிடம் மயங்கும் பெண்களை பேசி அவரது வீட்டிற்கு அழைத்து செல்வார்.
பின்னர் அங்கு பலவந்தமாக அவர்களை மிரட்டி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். அதை தனது செல்போனில் வீடியோவும் எடுத்து வைத்துள்ளதாகவும், அதை காட்டி சம்பந்தப்பட்ட பெண்களை மிரட்டி அடிக்கடி தனது காம இச்சையை தீர்த்துக்கொள்வதாகவும் கூறப்படுகிறது. தற்போது ஒரு பெண்ணை மிரட்டி உல்லாசமாக இருக்கும் வீடியோ வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவி வருகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆட்டோ டிரைவர் மோகன்ராஜ் மீது பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் போலீசில் புகார் கொடுக்க முன்வரவில்லை. இதனால் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினால் பல உண்மைகளும், அவர் இதுவரை எத்தனை குடும்ப பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்? என்ற விவரமும் தெரியவரும்.
எனவே அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story