தர்மபுரி மாவட்டத்தில் கனமழையால் நிரம்பும் ஏரிகள் - திடீர் அருவியால் பொதுமக்கள் உற்சாகம்
தர்மபுரி மாவட்டத்தில் கனமழையால் ஏரிகள் நிரம்ப தொடங்கின. வெள்ளோலை மலைப்பகுதியில் திடீர் அருவியால் பொதுமக்கள் உற்சாகம் அடைந்தனர்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை முதல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. பல்வேறு இடங்களில் நேற்று அதிகாலை வரை விடிய, விடிய மழை நீடித்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக மாரண்டஅள்ளியில் 48.20 மி.மீ. மழை பதிவானது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 201.60 மி.மீ. மழை பெய்தது. சராசரி மழையளவு 28.80 மி.மீ. ஆகும்.
மாவட்டம் முழுவதும் பகுதிவாரியாக பெய்த மழை விவரம் (மி.மீட்டரில்) பின்வருமாறு:- தர்மபுரி-36, பாலக்கோடு-45.80, மாரண்டஅள்ளி-48.20, பென்னாகரம்-12, ஒகேனக்கல்-10, அரூர்-31, பாப்பிரெட்டிப்பட்டி-18.60.
விடிய, விடிய பெய்த மழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலையோரங்களில் மழைதண்ணீர் தேங்கியது. தர்மபுரி -சேலம் சாலையில் பச்சியம்மன்கோவில் அருகே மழை தண்ணீர் சாலையின் இருபுறங்களிலும் கரைபுரண்டு ஓடியது. பென்னாகரம் சாலையில் உள்ள சத்யாநகர் பகுதி, குமாரசாமிப்பேட்டை கோவில் அருகே உள்ள குடியிருப்பு பகுதி, விளையாட்டு மைதானத்திற்கு செல்லும் சாலை, வத்தல்மலை பிரிவு சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலையில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக இந்த பகுதிகளில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த மழையால் தர்மபுரி நகரையொட்டி உள்ள ஏரிகள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. தர்மபுரி பிடமனேரி பகுதியில் உள்ள ஏரி நிரம்பியது. பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஏரி நிரம்பியதால் இந்த பகுதி மக்கள் ஆட்டை பலியிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இந்த மழை காரணமாக இலக்கியம்பட்டி ஏரி, ராமாக்காள் ஏரி, அன்னசாகரம் ஏரி ஆகியவற்றின் நீர்மட்டமும் கணிசமான அளவில் உயர்ந்தது.
தர்மபுரி அருகே உள்ள வெள்ளாலையில் உள்ள மலைப்பகுதியில் பெய்த கனமழையால் மலையின் உயரமான பகுதியில் இருந்து காட்டாற்று வெள்ளம் போல் மழைதண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. திடீர் அருவிபோல் காணப்பட்ட அந்த பகுதியை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உற்சாகத்துடன் பார்வையிட்டனர்.
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுதொடர்பாக விவசாயிகள் தரப்பில் கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் மொத்தமாக 800 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்து உள்ளது. இதனால் ஏரிகளில் நீர் இருப்பு அதிகரித்து உள்ளது.
இந்த மழையால் தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக நிலவிய கடுமையான வறட்சியின் பாதிப்பு குறையும் என்று நம்புகிறோம். மழை தண்ணீர் வீணாகாமல் நீர்நிலைகளுக்கு செல்வதை உறுதி செய்ய வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தேவையுள்ள இடங்களில் கால்வாய்களை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story