காவிரி கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் - கலெக்டர் அறிவுறுத்தல்
காவிரி கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என கலெக்டர் மெகராஜ் அறிவுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல்,
கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால், கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டமானது 120 அடியை கடந்துவிட்ட நிலையில், தற்போது மேட்டூர் அணையில் இருந்து சுமார் 27 ஆயிரம் கனஅடி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டு உள்ளது.
எனவே காவிரி ஆற்றின் கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் யாரும் உரிய பாதுகாப்பின்றி காவிரி ஆற்றுப்படுகை, கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளில் குளிக்கவோ, நீச்சல் அடித்தல் மற்றும் மீன்பிடித்தல் போன்ற காரியங்களில் ஈடுபடவோ கூடாது.
அபாயகரமான பகுதிகளில் நின்று செல்போனில் செல்பிகள் எடுக்கக்கூடாது. குழந்தைகள் காவிரி ஆற்றுப்படுகை, கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளில் இறங்கி விடாத வகையில் பொதுமக்கள் மற்றும் பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும், காவிரி கரையோர கிராமங்களில் வெள்ளநீரால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவை என கண்டறியப்பட்ட இடங்களில் மாவட்ட அளவில் நியமனம் செய்யப்பட்டு உள்ள பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
ஆற்றின் கரையோர கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் பாதுகாப்பான இடங்களுக்கும், மாவட்ட நிர்வாகத்தினால் ஏற்படுத்தப்பட்டு உள்ள நிவாரண முகாம்களுக்கும் செல்ல வேண்டும். மேலும் பாதிப்பிற்குள்ளாகக்கூடிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள், அவசர கால உதவிக்கு மாவட்ட அவசர கால நடவடிக்கை மையத்திற்கு 1077 என்ற எண்ணிற்கோ அல்லது சம்பந்தப்பட்ட அலுவலர்களையோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story