நாமக்கல் அருகே, வீசாணம் ஏரியில் குடிமராமத்து பணிகள் - கலெக்டர் மெகராஜ் பார்வையிட்டார்


நாமக்கல் அருகே, வீசாணம் ஏரியில் குடிமராமத்து பணிகள் - கலெக்டர் மெகராஜ் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 27 Sept 2019 4:00 AM IST (Updated: 27 Sept 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் அருகே உள்ள வீசாணம் ஏரியில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை கலெக்டர் மெகராஜ் பார்வையிட்டார்.

நாமக்கல், 

நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வீசாணம் சின்ன ஏரி மற்றும் பெரிய ஏரி ஆகிய ஏரிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள், பலப்படுத்தும் பணிகள் மற்றும் வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் குடிமராமத்து திட்டப்பணிகள் குறித்து பொது மக்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது பொதுமக்கள், சின்ன ஏரி மற்றும் பெரிய ஏரி ஆகியவற்றுக்கு நைனாமலை பகுதியில் இருந்து தண்ணீர் வருவதாக தெரிவித்தனர். பின்னர் கலெக்டர், சின்ன ஏரி மற்றும் பெரிய ஏரி ஆகியவற்றுக்கான வரத்து வாய்க்கால்களை தூர்வாரும் பணியை ஊரக வளர்ச்சித் துறையின் பல்வேறு திட்டங்கள் மூலமாக தலா 150 மீட்டர் நீளத்திற்கு மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து கலெக்டர் சிவியாம்பாளையம் ஊராட்சியில் உள்ள பெரிய ஏரியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் ஏரி ஆழப்படுத்தப்பட்டு கரைகள் சீரமைக்கப்பட்டு உள்ளதை பார்வையிட்டார்.

பின்னர், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், தாங்கள் பணிபுரியும் பகுதிகளில் தெரு விளக்குகள் சரியாக எரிவதையும், குடிநீர் வினியோகம் செய்யப்படுவதையும் அடிக்கடி நேரில் பார்வையிட்டு உறுதி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, நாமக்கல் தாசில்தார் பச்சைமுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருணன், தேன்மொழி உள்பட ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story