உள்ளாட்சி தேர்தலுக்காக சேலத்துக்கு 8,150 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன - துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு


உள்ளாட்சி தேர்தலுக்காக சேலத்துக்கு 8,150 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன - துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 27 Sept 2019 4:15 AM IST (Updated: 27 Sept 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தலுக்காக 8,150 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சேலத்துக்கு கொண்டு வரப்பட்டன. எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கன்னங்குறிச்சி,

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. இதற்காக மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு எந்திரங்களை ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு கருவிகள் பீகார் மாநிலத்தில் இருந்து அனுப்பி வைக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி, 3 ஆயிரத்து 700 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு கருவிகளும், 8,150 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் 9 கன்டெய்னர் லாரிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேலத்துக்கு நேற்று கொண்டு வரப்பட்டன.

வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு கருவிகள் சேலம் தொங்கும் பூங்காவில் உள்ள மாநகராட்சி கட்டிடத்திலும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கன்னங்குறிச்சி பேரூராட்சிக்கு சொந்தமான சமுதாய கூடத்திலும் இறக்கி பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அதன் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு கருவிகள் சரியாக உள்ளதா? அல்லது பழுதாகி உள்ளதா? என்பதை பெல் நிறுவனத்தின் என்ஜினீயர்கள் விரைவில் சரிபார்க்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story