கொத்தமங்கலத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்


கொத்தமங்கலத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்
x
தினத்தந்தி 27 Sept 2019 4:30 AM IST (Updated: 27 Sept 2019 2:08 AM IST)
t-max-icont-min-icon

கொத்தமங்கலத்தில் குடிதண்ணீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் ஊராட்சி, மாவட்டத்தில் பெரிய ஊராட்சிகளில் ஒன்றாக உள்ளது. இங்கு பல இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பழைய ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு குடிதண்ணீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் கொத்தமங்கலம் தெற்கு கூலாச்சிகொல்லை பகுதியில் கடந்த 2 மாதமாக குடி தண்ணீருக்கான ஆழ்குழாய் கிணற்றில் உள்ள நீர்மூழ்கி மோட்டார் பழுதடைந்துள்ளது. இதனால் பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை.

நடவடிக்கை இல்லை

குடிதண்ணீர் ஆழ்குழாய் கிணறுக்கான நீர்மூழ்கி மோட்டார் பழுதாகிவிட்டது. அதனை உடனடியாக சீரமைத்து தண்ணீர் வழங்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி செயலரிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் ஊராட்சி மன்ற அலுவலக பதிவேடுகள் ஆய்வுக்காக எடுத்து செல்லப்பட்டுவிட்டதால் தற்போது எந்த செலவும் செய்ய முடியாது என்று ஊராட்சி தரப்பில் இருந்து பதில் கூறியுள்ளனர். மேலும் பொதுமக்களே இணைந்து மோட்டாரை பழுது நீக்கிக் கொள்ளவும் கூறப்பட்டுள்ளது. அதன் பிறகு கடந்த சில நாட்களாக ஊராட்சி செயலரை தொடர்பு கொண்டும், பதில் இல்லை என்று கூறப்படுகிறது.

சாலை மறியல், முற்றுகை

இந்த நிலையில் நேற்று மாலை கூலாச்சிகொல்லை பகுதி பெண்கள், பொதுமக்கள் காலிக்குடங்களுடன் கடைவீதிக்கு வந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு பொதுமக்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்று அப்பகுதியினர் கேட்டு கொண்டதால், காலிக்குடங் களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அதிகாரி ராஜ்மோகன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் திறந்து பல நாட்கள் ஆகிவிட்டது. ஊராட்சி கணக்குகளும் இங்கு இல்லை. அதனால் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காது. இதனால் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் ஒப்புதல் அளித்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறினார்கள். அதன் பிறகு திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் கோகுலகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலரின் செல்போனை தொடர்பு கொண்டு பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 3 நாட்களில் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதன் பிறகு போராட்டம் கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story