திடீர் வெள்ளத்தால் 600 வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன; புனேயில் பலத்த மழைக்கு 17 பேர் பலி


திடீர் வெள்ளத்தால் 600 வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன; புனேயில் பலத்த மழைக்கு 17 பேர் பலி
x
தினத்தந்தி 26 Sep 2019 11:43 PM GMT (Updated: 26 Sep 2019 11:43 PM GMT)

புனேயில் பலத்த மழையால் திடீரென ஊருக்குள் வெள்ளம் புகுந்ததில் 600 வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. 17 பேர் பலியானார் கள். பலர் வீட்டு கூரையிலும், மரத்திலும் ஏறி தங்கள் உயிரை காப்பாற்றிக்கொண்டனர்.

புனே, 

மராட்டியத்தில் பருவமழை பெய்து வருகிறது. சமீபத்தில் மும்பை மற்றும் மேற்கு மராட்டிய பகுதிகளில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. இதில் கொத்து, கொத்தாய் உயிர் பலி ஏற்பட்டது. மேலும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் மராட்டியத்தின் வரலாற்று சிறப்புமிக்க நகராக கருதப்படும் புனேயை பருவமழை பதம் பார்த்தது. அந்த நகரில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய மழை கொட்டியது. நேற்று காலை வரை மழை நீடித்தது. இடைவிடாமல் பெய்த பேய் மழையால் புனேயின் சிங்காட் ரோடு, தானாக்வாடி, பாலாஜிநகர், அம்பேகாவ், சகாகர் ரோடு, பார்வதி, கோலேவாடி, கிர்கத்வாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்க தொடங்கின.

மேலும் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் காட்டாற்று வெள்ளம் காரணமாக புனே நகருக்குள் மழை நீர் புகுந்து விட்டது. பல தெருக்களில் சுமார் 7 அடி உயரத்துக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் நகர மக்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு இரவு பொழுதை கழித்தனர்.

இதேபோல புனே மாவட்டத்தில் உள்ள பாராமதி, போர், ஹவேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளும் கன மழையால் வெள்ளக்காடாகின. மழை வெள்ளம் காரணமாக புனே நகரிலும், மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மக்கள் வீடுகளின் மொட்டை மாடி, கூரைகளில் தஞ்சம் அடைந்தனர். மேலும் பலர் மரங்களில் ஏறியும் உயிரை காப்பாற்றிக்கொண்டனர். குறிப்பாக சோலாப்பூர் ரோடு பகுதியில் 300 பேர் வீட்டு கூரையில் ஏறி நின்றனர்.

பொழுது விடிந்தபோது தான் மழை தாண்டவமாடியது வெளியுலகுக்கு தெரியவந்தது. புனே நகரம் சின்னாபின்னமாகி கிடந்தது. தெருக்களில் குப்பை குவியல் போல வாகனங்கள் குவிந்து கிடந்தன.

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதில் வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்று மோதி உருக்குலைந்து கிடந்தன. இதில் கார், மோட்டார் சைக்கிள் என எந்த வாகனங்களும் விதிவிலக்கல்ல. வீடு திரும்பிய பலர் வாகனங்களோடு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

இதற்கிடையே மும்பை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை கேத்-சிவாபூர் பகுதியில் உள்ள தர்கா ஒன்றில் படுத்து தூங்கிய 5 பேர் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

ஆரனேஸ்வர் பகுதியில் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியானார்கள். அவர்கள் பெயர் சந்தோஷ் கதம் (வயது55), லஷ்மிபாய் பவார் (69), ரோகித் (14), ஜான்வி (34), ஷீர்தேஷ் (8) என்று தெரியவந்தது.

சகாகர் நகர் பகுதியில் ஒருவர் காருக்குள் பிணமாக கிடந்தார். சிங்காட் ரோடு பகுதியில் 52 வயது நபர் ஒருவர் காருடன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பலியானார். கட்ரஜ் பகுதியில் மற்றொருவர் காருக்குள் பிணமாக கிடந்தார். பார்வதி பகுதியில் 2 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

மொத்தத்தில் புனே மற்றும் புனே மாவட்டத்தில் பெய்த பேய் மழைக்கு 17 பேர் உயிரிழந்து இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. மேலும் 600 வாகனங்கள் சேதம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

கனமழை காரணமாக நசாரா அணையில் திறந்து விடப்பட்ட வெள்ளத்தால் கரையோர பகுதி மக்கள் வெள்ளத்தில் சிக்கி கொண்டனர். பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.

கடக்வாஸ்தா அணை ஏற்கனவே முழு கொள்ளவை எட்டி விட்டது. தற்போது அணையில் இருந்து உபரி நீர் அதிகளவில் திறந்து விடப்பட்டுள்ளதால் கரையோரம் வசிக்கும் 500 பேரை மீட்பு படையினர் மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனர்.

காரா நதியில் ஏற்பட்ட வெள்ளத்தல் சாஸ்வாட்-நாராயண் பூர் பகுதியில் சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மீட்கப்பட்டு புரந்தர் பகுதியில் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். வெள்ளம் சூழ்ந்த சுமார் 44 இடங்களில் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணி நடந்து வருகிறது.

மொத்தம் 16 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

புனேயில் ஒரே நாளில் 20 செ.மீ. மழை பதிவாகியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த மழை பாதிப்பை தொடர்ந்து புனே மாவட்டத்தில் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

மழை வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இரங்கல் தெரிவித்து உள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை அரசு வழங்கும் என்றும் கூறினார்.

Next Story