சொந்த ஊரான குயிலாப்பாளையத்தில் ரவுடி தாதா மணிகண்டன் உடல் தகனம் 3-வது நாளாக கடைகள் மூடல்; பதற்றம்


சொந்த ஊரான குயிலாப்பாளையத்தில் ரவுடி தாதா மணிகண்டன் உடல் தகனம் 3-வது நாளாக கடைகள்  மூடல்; பதற்றம்
x
தினத்தந்தி 27 Sept 2019 5:33 AM IST (Updated: 27 Sept 2019 5:33 AM IST)
t-max-icont-min-icon

என்கவுண்ட்டரில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி தாதா மணிகண்டனின் சொந்த ஊரான குயிலாப்பாளையத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இதையொட்டி 3-வது நாளாக அங்கு கடைகள் மூடப்பட்டிருந்தன.

வானூர்,

புதுச்சேரியை யொட்டி உள்ள தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் குயிலாப்பாளையத்தை சேர்ந்தவர் அமிர்தலிங்கம். இவருக்கு மணிகண்டன், ஆறுமுகம், ஏழுமலை ஆகிய 3 மகன்கள் மற்றும் மகள்கள் இருந்தனர். விவசாயியான அமிர்தலிங்கத்துக்கு மணிகண்டன் உதவியாக இருந்து வந்தார். இந்தநிலையில் சிறு சிறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக மணிகண்டன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இப்படி தொடங்கிய நிலையில் வழிப்பறி, கட்டப்பஞ்சாயத்து, அடிதடி என ஈடுபட்டு பணத்துக்காக எதையும் செய்யும் கூலிப்படை தலைவனாக பிரபல தாதாவாக வலம் வந்தார். இதனாலேயே தாதா மணிகண்டன் என்று ரவுடிக் கும்பலால் அழைக்கப்பட்டார். இந்தநிலையில் ஆரோவில், குயிலாப்பாளையம் உள்ளிட்ட அந்த பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் கொடிகட்டி பறந்தது.

இதில் தலையிட்டு போலியாக பத்திரம் தயாரித்து நிலமோசடி, நிலம் வாங்குபவர்களிடம் கமிஷன் என கோடி கோடியாக பணம் சம்பாதித்தார். இதே ஆரோவில் பகுதியை சேர்ந்த பூபாலன் என்பவரும் அங்கு இன்னொரு ரவுடியாக வலம் வந்தார். இவர்களது ஒப்புதலின்றி நிலம் வாங்குவது, விற்பது நடைபெறாது. அந்த அளவுக்கு இவர்களின் ஆதிக்கம் இருந்து வந்தது.

இந்த வகையில் தாதா மணிகண்டன் மீது 8 கொலை வழக்குகள், வழிப்பறி, பணம் பறிப்பு உள்ளிட்ட குற்ற சம்பவங்களுக்காக 27 வழக்குகளும் இருந்தன. இந்த வழக்குகளில் ஆஜாராகாமல் இருந்து வந்த தாதா மணிகண்டனை ஆஜர்படுத்த கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தனிப்படை அமைத்து அவரை தேடி வந்தனர்.

இதில், சென்னை அண்ணாநகரில் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் தாதா மணிகண்டன் வசித்து வந்ததை அறிந்து தனிப்படை போலீசார் அங்கு சென்று பிடிக்க முயன்றனர். அப்போது போலீசாரை கத்தியால் வெட்டியதை தொடர்ந்து என்கவுண்ட்டர் நடவடிக்கையாக தாதா மணிகண்டன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதுபற்றிய தகவல் பரவியதால் அவரது சொந்த ஊரான குயிலாப்பாளையம் மற்றும் ஆரோவில் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு 3-வது நாளாக நேற்று கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து பதற்றம் நீடித்து வருவதால் போலீசாரும் பாதுகாப்பு பணியில் இருந்து வருகின்றனர்.

தாதா மணிகண்டனின் உடலை வாங்க அவரது மனைவி ஆனந்தி மறுப்பு தெரிவித்தார். இதனால் உறவினர்களை வரவழைத்து அவர்களிடம் போலீசார் பேசினர். தாதா மணிகண்டனின் உடலை பெற்றுக் கொள்ள சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பிரேத பரிசோதனை நடந்தது.

அதன்பின் தாதா மணிகண்டனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சென்னையில் இருந்து ஆம்புலன்சில் எடுத்துச் செல்லப்பட்டது. மாலை 6 மணியளவில் குயிலாப்பாளையத்துக்கு தாதா மணிகண்டனின் உடல் வந்து சேர்ந்தது. அங்கு அவரது வீட்டில் உடல் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அங்கு இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டு வீட்டில் இருந்து சுடுகாட்டுக்கு தாதா மணிகண்டன் உடலை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அங்கு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் 150க்கும் மேற்பட்ட போலீசார் குயிலாப்பாளையம் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். முக்கிய சந்திப்புகளில் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

Next Story