மாற்றுத்திறனாளிகள் கடினமாக உழைத்தால் ஜொலிக்கலாம் - ஐகோர்ட்டு நீதிபதி புகழேந்தி பேச்சு


மாற்றுத்திறனாளிகள் கடினமாக உழைத்தால் ஜொலிக்கலாம் - ஐகோர்ட்டு நீதிபதி புகழேந்தி பேச்சு
x
தினத்தந்தி 27 Sept 2019 4:30 AM IST (Updated: 27 Sept 2019 5:50 AM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளிகள் கடினமாக உழைத்தால் வாழ்க்கையில் ஜொலிக்கலாம் என்று ஐகோர்ட்டு நீதிபதி புகழேந்தி பேசினார்.

மதுரை,

மத்திய அரசின் பல்வகை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய நிறுவனம், மதுரை பெத்சான் சிறப்பு பள்ளி சார்பில் ‘மாற்றுத்திறனாளிகள் உரிமைச்சட்டம்-2016‘ மாநாடு நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியை ஐகோர்ட்டு நீதிபதி புகழேந்தி தொடங்கி வைத்து பேசியதாவது:-

முன்பெல்லாம் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் ஒடுக்கப்பட்டவர்களாக இந்த சமூகம் கருதி அவர்களுக்கு பல இன்னல்களை கொடுத்தது. அவர்கள் சாதாரண வாழ்க்கையை வாழ பல தடைகளை தாண்டும் நிலை இருந்தது. முன்னோர்கள் செய்த பாவத்தினால் பிறந்ததாக இவர்களை பார்த்தனர். ஒருவேளை உணவு, உடையை கொடுப்பது பெரிய தர்ம காரியமாக பார்க்கப்பட்டது. தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்ததால் தற்போது மனிதர்களுக்கு புதிய புதிய வாய்ப்புகளும், பிரச்சினைகளும் வந்து கொண்டே இருக்கின்றன. இந்த சமயத்தில் மாற்றுத்திறனாளிகளின் நிலையை மாற்ற முயற்சி செய்ய வேண்டும். அவர்களுக்கு உரிய சட்ட உரிமைகள் என்னென்ன என்பதை அறிந்து பெறுவதற்கு இந்த மாநாடு உதவியாக இருக்கும்.

21 வகையான குறைபாடுகளை கொண்டவர்கள் மாற்றுத்திறனாளிகளாக வரையறுக்கப்பட்டுள்ளனர். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களும், மாற்றுத்திறனாளிகளை பயன்படுத்தும் வகையில் கட்டமைப்புகளை மாற்றி அமைத்தல். இலவச சட்ட உதவி பெறுதல் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தீங்கு இழைப்பவர்களுக்கு சிறைதண்டனை அளித்தல், மாவட்டந்தோறும் சிறப்பு கோர்ட்டுகளை ஏற்படுத்துதல் உள்ளிட்டவை மாற்றுத்திறனாளிகள் உரிமைச்சட்டத்தின் சிறப்பு அம்சங்கள் ஆகும்.

ஹெலன் கெல்லர், ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற மாற்றுத்திறனாளிகள் எல்லாம் தங்களது ஊனத்தை பொருட்படுத்தாமல் கடின உழைப்பால் ஜொலித்தார்கள். அதுபோல உடல் குறைபாடுகள் இருந்தாலும் முயற்சியால் மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையின் உயரத்தை அடைய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரமநாயகம், வக்கீல் கு.சாமித்துரை, அப்பல்லோ ஆஸ்பத்திரி நரம்பியல் டாக்டர் மீனாட்சிசுந்தரம், பெத்சான் சிறப்பு பள்ளி முதல்வர் ரவிக் குமார் ஆகியோரும் இந்த சட்டம் குறித்து விளக்கினர். 

Next Story