மஞ்சள் ஒரு குவிண்டாலுக்கு ரூ.12 ஆயிரம் ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை


மஞ்சள் ஒரு குவிண்டாலுக்கு ரூ.12 ஆயிரம் ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 28 Sept 2019 4:15 AM IST (Updated: 27 Sept 2019 8:31 PM IST)
t-max-icont-min-icon

மஞ்சள் ஒரு குவிண்டாலுக்கு ரூ.12 ஆயிரம் ஆதாரவிலை நிர்ணயிக்க வேண்டும் என்று வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகளுக்கான வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா முன்னிலை வகித்தார். காலை 10 மணி முதல் 11.30 மணி வரை மனுக்கள் பெறப்பட்டது. அதைத்தொடர்ந்து விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயம் தொடர்பான தங்கள் பகுதி பிரச்சினைகள் குறித்து பேசினார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது:-

கீழ்பவானி, காலிங்கராயன் பாசனத்தில் கொப்புவாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் கடைமடை வரை செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான போராட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டு உள்ள விவசாயிகளை உடனடியாக விடுவிக்க மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும்.

கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள், பால் வாங்கும் இடத்திலேயே பாலுக்கான கொள்முதல் விலையை நிர்ணயிக்க வேண்டும். மாவட்ட ஆவின் அல்லது சென்னைக்கு கொண்டு சென்ற பிறகு விலையை நிர்ணயம் செய்யும் நடைமுறையால் தரமான பால் வழங்கும் விவசாயிகள் பாதிப்படைகின்றனர். இந்த நடைமுறையை மாற்ற வேண்டும்.

கரும்பு வெட்டிய 15 நாட்களுக்குள், தனியார் ஆலைகள் பணம் கொடுக்க வேண்டும். ஆனால் 3 மாதங்கள் ஆன பிறகும் ஆலைகள் பணம் வழங்காமல் உள்ளது. மாநில அரசு ஆதார விலையான டன்னுக்கு ரூ.1,325 அறிவித்து உள்ளது. இந்த தொகையில் டன்னுக்கு ரூ.130 கொடுத்துவிட்டு முழுதொகையும் பெற்றுக்கொண்டதாக விவசாயிகளிடம் தனியார் ஆலை நிர்வாகம் எழுதி வாங்கி வருகிறது. இந்த மோசடியை தடுக்க மாவட்ட நிர்வாகம் கரும்பு ஆலை நிர்வாகத்துக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும். மேலும் விவசாயிகளிடம் பணத்தை பிடித்தம் செய்தும் கூட, வங்கிகளுக்கு ஆலை நிர்வாகங்கள் பணம் செலுத்துவதில்லை. இதனால் புதிதாக பயிர்க்கடன் வாங்க முடியவில்லை.

பெண் அலுவலர்கள் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலகங்களில் அருகிலேயே கழிப்பிட வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். மழை காலம் தொடங்கிவிட்ட நிலையில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட கால்நடைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழ்பவானி பாசனத்தில் வீட்டு மனைகள், தொழிற்சாலைகளாக மாறி உள்ள நிலங்களுக்கு தண்ணீர் விடுவதை நிறுத்த வேண்டும். மஞ்சளுக்கு ஒரு குவிண்டாலுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை ரூ.12 ஆயிரம் என நிர்ணயிக்க வேண்டும். நிலுவையில் உள்ள பயிர்காப்பீட்டு இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

கடந்த ஒரு மாதத்தில் காவிரி ஆற்றில் இருந்து சுமார் 30 டி.எம்.சி தண்ணீர் கடலில் கலந்து உள்ளது. இந்த உபரி நீரை ஈரோடு மாவட்டத்தில் மிகவும் வறட்சியான வட்டாரங்களான அந்தியூர், அம்மாபேட்டை பகுதிகளுக்கு நீரேற்று பாசனத்திட்டம் மூலம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈரோடு மாவட்டத்தில் 3-ல் ஒரு பகுதி நிலம் வனப்பகுதியாக உள்ளது. இங்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வனப்பகுதியில் மக்களுக்கு பல்வேறு வாழ்வியல் பிரச்சினைகள் உள்ளன. இதனை தீர்க்க வனத்துறை மூலம் குறைகேட்பு கூட்டத்தை 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்த வேண்டும்.

100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. எனவே நிலுவை ஊதிய தொகையை உடனடியாக வழங்க வேண்டும். வன உரிமைச்சட்டம் குறித்து கிராம வனக்குழுக்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

இவ்வாறு விவசாய சங்க பிரதிநிதிகள் கூறினார்கள்.

முன்னதாக மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் பேசும்போது, ‘பவானிசாகர் அணைக்கு கீழ், காலிங்கராயன்பாளையம் வரை பவானி ஆற்றில் 7 இடங்களில் தடுப்பணை கட்ட ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் வறட்சி பகுதியான அம்மாபேட்டை தாலுகா பகுதிக்கு, காவிரி உபரி நீரை நீரேற்று பாசன திட்டம் மூலம் கொண்டு செல்லும் திட்டம் ஆலோசனை நிலையில் உள்ளது.

மலைப்பகுதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான விண்ணப்பங்களை பெற சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது’ என்றார். கூட்டத்தில் அரசு அதிகாரிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டார்கள்.

Next Story