உள்ளாட்சி தேர்தலுக்காக 6 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பெங்களூருவில் இருந்து வேலூர் கொண்டு வரப்பட்டது


உள்ளாட்சி தேர்தலுக்காக 6 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பெங்களூருவில் இருந்து வேலூர் கொண்டு வரப்பட்டது
x
தினத்தந்தி 28 Sept 2019 3:45 AM IST (Updated: 27 Sept 2019 9:02 PM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்த முதல் கட்டமாக பெங்களூரு ‘பெல்’ நிறுவனத்தில் இருந்து நேற்று 6 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வேலூருக்கு கொண்டு வரப்பட்டன.

வேலூர், 

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்காக வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி நடக்கிறது. இந்த நிலையில் வருகிற நவம்பர் மாதம் தேர்தல் நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், கிராம பஞ்சாயத்துகளில் வாக்குச்சீட்டுகளும் பயன்படுத்தப்பட உள்ளது.

எனவே விரைவில் தேர்தல் நடைபெற இருப்பதால் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பயன்படுத்துவதற்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தயார் நிலையில் வைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதால் அதில் பயன்படுத்திய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஏனெனில் குறிப்பிட்ட நாட்களுக்கு பின்னரே அதில் பதிவான வாக்குகளை அழித்து விட்டு வேறு தேர்தலுக்கு பயன்படுத்த முடியும்.

எனவே பக்கத்து மாநிலமான கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பெல் நிறுவனத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு வந்து பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக வேலூர் மாநகராட்சி முதலாவது மண்டல துணை கமிஷனர் மதிவாணன் தலைமையில் மாநகராட்சி மற்றும் நகராட்சி பணியாளர்கள் பெங்களூரு சென்றிருந்தனர்.

அவர்கள் ‘பெல்’நிறுவனத்தில் இருந்து முதல்கட்டமாக 4 கன்டெய்னர் லாரிகளில் 6 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ஏற்றிவந்தனர். நேற்று காலை வேலூருக்கு வந்து சேர்ந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வேலூரில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

Next Story