எதிர்க்கட்சிகளை மத்தியஅரசு மிரட்டி தன் வழிக்கு கொண்டு செல்கிறது - சி.ஐ.டி.யூ. அகில இந்திய துணைத் தலைவர் பேச்சு


எதிர்க்கட்சிகளை மத்தியஅரசு மிரட்டி தன் வழிக்கு கொண்டு செல்கிறது - சி.ஐ.டி.யூ. அகில இந்திய துணைத் தலைவர் பேச்சு
x
தினத்தந்தி 28 Sept 2019 4:45 AM IST (Updated: 27 Sept 2019 11:16 PM IST)
t-max-icont-min-icon

எதிர்க்கட்சிகளை மத்தியஅரசு மிரட்டி தன் வழிக்கு கொண்டு செல்கிறது என சி.ஐ.டி.யூ. அகில இந்திய துணைத் தலைவர் டி.கே.ரங்கராஜன் பேசினார்.

தஞ்சாவூர்,

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மாநாடு தொடக்கவிழா நேற்றுகாலை நடந்தது. இதற்கு மாநில தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். வரவேற்புக்குழு தலைவர் தமிழ்மணி வரவேற்றார். சி.ஐ.டி.யூ. அகில இந்திய துணை தலைவர் டி.கே.ரங்கராஜன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசின் கொள்கைகளை எதிர்த்து உரிமைக்காக போராடும் அமைப்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் உள்ளது. மத்தியஅரசின் பஞ்சப்படியை போராடி பெற்று தந்தது ஜாக்டோ-ஜியோ அமைப்பு என்பது மறுக்க முடியாது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கங்கள் இணைந்து, ஒற்றுமையாக போராட வேண்டியது அவசியம். அரசு ஊழியர்கள் நேரடியாக அரசியலில் ஈடுபட முடியாது. நவீன தாராளமயத்தின் காரணமாக விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்துள்ளது.

இதனால் மனித சக்திகளின் தேவை குறைந்து எந்திரங்களின் தேவை அதிகரித்துவிட்டது. அரசு ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2000-ம் ஆண்டுக்கு பிறகு புதிய அரசு ஊழியர்கள் பணியில் சேர்த்து கொள்ளப்படவில்லை. மத்தியஅரசு தனக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளை மிரட்டி தன் வழிக்கு கொண்டு செல்கிறது. மாநிலங்களின் உரிமைகளை பறிக்கக்கூடியதாக மத்தியஅரசின் சட்டங்கள் உள்ளன.

அதற்கு உதாரணமாக மேட்டார் வாகன சட்டம் உள்ளது. மோட்டார் வாகன சட்டம் கொண்டு வரப்பட்டதன் நோக்கம் போக்குவரத்து துறையை மாநில அரசின் கையில் இருந்து பிடுங்கி, கொஞ்சம் கொஞ்சமாக தனியார்மயமாக்குவது தான். அதேபோல புதிய கல்வி கொள்கை மூலம் மாநில அரசின் கையில் இருந்த மருத்துவக்கல்லூரிகள் மத்தியஅரசின் கட்டுப்பாட்டில் சென்றுவிடும் அபாயம் உள்ளது. சி.பி.ஐ., ஐ.பி., நீதிமன்றங்கள், நீதிபதிகள் அரசின் கைப்பாவையாக செயல்படும் நிலை வேதனை அளிக்கிறது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. வேலையில்லாத இளைஞர்களை திரட்டுவது, அவர்களுக்காக பாடுபடுவது என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சங்கத்திற்கான வலைதளத்தை அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளத்தின் பொதுச் செயலாளர் ஸ்ரீகுமார் வெளியிட்டார். தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில தலைவர் சீதரன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் மயில், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் ஆகியோர் பேசினர். பொதுச் செயலாளர் அன்பரசு, மாநில பொருளாளர் தங்கராஜ் ஆகியோர் வரவு செலவுகளை சமர்ப்பித்தனர்.

மாநாட்டில், 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். தொகுப்பூதியம் பெற்று வரும் கணினி உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். அரசுத்துறைகளில் உள்ள லட்சக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

அரசுத்துறையை தனியார்மயமாக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும். சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக வரன்முறை செய்ய வேண்டும். காவிரிடெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களை கைவிட வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின்போது மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள், வழக்குகள், தொலைதூர மாறுதல்கள் ஆகியவற்றை ரத்து செய்து பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த மாநாடு நாளை(ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கிறது.

Next Story