திருமண ஆசை காட்டி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை; திருவாரூர் கோர்ட்டு தீர்ப்பு


திருமண ஆசை காட்டி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை; திருவாரூர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 28 Sept 2019 4:45 AM IST (Updated: 28 Sept 2019 12:05 AM IST)
t-max-icont-min-icon

திருமண ஆசை காட்டி பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவாரூர் கோர்ட்டு உத்தரவிட்டது.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள சேங்காலிபுரத்தை சேர்ந்தவர் செந்தில்வேல். இவருடைய மகன் செல்வேந்திரன்(வயது 30). விவசாய கூலி தொழிலாளி. கடந்த 2016-ம் ஆண்டு இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது செல்வேந்திரன் அந்த மாணவியிடம் திருமண ஆசை காட்டி உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் அந்த மாணவி கர்ப்பம் அடைந்தார்.

மாணவி கர்ப்பம் அடைந்ததால் அதிர்ச்சி அடைந்த அவளது பெற்றோர் இது குறித்து நன்னிலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் செல்வேந்திரன் மீது புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வேந்திரனை கைது செய்து திருவாரூர் மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதற்கிடையில் அந்த மாணவிக்கு ஆண்குழந்தை பிறந்தது. மேலும் மரபணு சோதனையில், மாணவிக்கு பிறந்த குழந்தைக்கு செல்வேந்திரன் தான் தந்தை என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் மாணவியை கர்ப்பமாக்கிய செல்வேந்திரனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து

திருவாரூர் மகிளா கோர்ட்டு நீதிபதி பக்கிரிசாமி தீர்ப்பு கூறினார். இதைத்தொடர்ந்து செல்வேந்திரனை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story