தண்டவாளத்தில் பாறைகள் விழுந்தன: மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மலைரெயில் போக்குவரத்து ரத்து
தண்டவாளத்தில் பாறைகள் விழுந்ததால் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே மலைரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
குன்னூர்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு அழகிய மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலைரெயிலில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பயணம் செய்து இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து செல்கின்றனர். மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை நீராவி என்ஜின் மூலமாகவும், குன்னூர் முதல் ஊட்டி வரை டீசல் என்ஜின் மூலமாகவும் மலைரெயில் இயக்கப்படுகிறது. மலைகளை குடைந்து ரெயில் பாதை அமைக்கப்பட்டு உள்ளதால் மண் சரிவு ஏற்படுதல், பாறைகள் உருண்டு விழுதல், மரங்கள் வேரோடு சாய்தல் போன்ற நிகழ்வுகளால் தண்டவாளம் சேதம் அடைகிறது. அந்த நேரங்களில் மலைரெயில் ேபாக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதற்கிடையில் கடந்த சில நாட்களாக குன்னூர் பகுதியில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைரெயில் பாதையில் ரன்னிமேடு-ஹில்குரோவ் ரெயில் நிலையங்களுக்கு இடையில் இச்சிமரம் என்ற இடத்தில் 2 ராட்சத பாறைகள் உருண்டு தண்டவாளத்தில் விழுந்தன. இதனால் தண்டவாளம் சேதம் அடைந்தது.
இதுகுறித்து நேற்று காலை குன்னூர் ரெயில்வே ஊழியர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு ஊழியர்கள் சென்றனர். பின்னர் பாறைகளை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் தண்டவாளத்தை சீரமைக்கும் பணி நடந்தது.
இதற்கிடையில் வழக்கம்போல் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு மலைரெயில் வந்து கொண்டு இருந்தது. தண்டவாள சீரமைப்பு பணி காரணமாக ஹில்குரோவ் ரெயில் நிலையத்தில் மலைரெயில் நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர். பணிகள் நிறைவடையாத காரணத்தால் மீண்டும் மலைரெயில் மேட்டுப்பாளையத்துக்கு திருப்பி விடப்பட்டது. மேலும் நேற்று மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மலைரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
குன்னூர்-ஊட்டி இடையே மலைரெயில் போக்குவரத்து வழக்கம்போல் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story