காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் மணல் அள்ள எதிர்ப்பு: விவசாயிகள் ஊர்வலம்- ஆர்ப்பாட்டம்


காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் மணல் அள்ள எதிர்ப்பு: விவசாயிகள் ஊர்வலம்- ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Sept 2019 4:15 AM IST (Updated: 28 Sept 2019 1:47 AM IST)
t-max-icont-min-icon

காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் மணல் அள்ள எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி,

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சிவராசு தலைமை தாங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பங்கேற்க, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன் தலைமையில் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் மற்றும் விவசாயிகள் ஊர்வலமாக வந்தனர்.

அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காவிரி, கொள்ளிடத்தில் மேலும் 3 ஆண்டுகளுக்கு மணல் அள்ள அனுமதிக்கலாம் என்ற ஆய்வுக்குழுவின் பரிந்துரையை தமிழ்நாடு அரசு நிராகரிக்க வேண்டும் என்றும், வீணாக கடலுக்கு போகும் காவிரி உபரிநீரை உயிர் நீர் ஆக்கும் திட்டங்களை நிறைவேற்றிட வேண்டும் என்றும், பால் உற்பத்தியாளர்களுக்கு அரசு அறிவித்துள்ள கொள்முதல் விலையை முழுமையாக வழங்க வேண்டும் என்றும் கோ‌‌ஷம் எழுப்பினர்.

பின்னர் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள், கோரிக்கை அடங்கிய மனுவை கலெக்டர் சிவராசுவிடம் வழங்கினர். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக 30 அடி ஆழத்திற்கும் கீழ் பொக்லைன் எந்திரம் கொண்டு மணல் தோண்டி எடுக்கப்பட்டது. இதனால், காவிரி, கொள்ளிடத்தை நம்பியுள்ள திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு எடுக்கப்பட்டு வரும் கூட்டுக்குடிநீர் திட்ட பகுதிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தொடர் மணல் கொள்ளையால் காவிரி, கொள்ளிடம் ஆறுகள் பள்ளமாகவும், பாசன கால்வாய்கள் மேடாகியும் பாசனத்திற்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

காவிரி, கொள்ளிடத்தில் மணல் அள்ள நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று போராடி வரும் நிலையில், மேலும் 3 ஆண்டுகள் மணல் அள்ள அனுமதிக்கலாம் என ஆய்வுக்குழு பரிந்துரை செய்துள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது. எனவே, அரசு இந்த ஆய்வு அறிக்கையை முற்றிலும் புறக்கணிப்பதுடன் மணல் அள்ள நிரந்தர தடை விதிக்க வேண்டும்.

திருச்சி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், நடப்பு சாகுபடியை விவசாயிகள் தொடங்கி விட்டனர். எனவே, சாகுபடிக்கான வங்கி கடன் பெற கிராம நிர்வாக அதிகாரிகள் அடங்கல் வழங்க தாமதப்படுத்தி வருகிறார்கள். எனவே, அடங்கல் வழங்க கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு பேசுகையில், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் ‘கேச்’வீல் உள்ள டிராக்டர்கள் விவசாயிகளுக்கு கிடைக்க உதவிட வேண்டும். தண்டல்-காமாட்சிப்பட்டிக்கு இடையே அமைக்கப்பட்டிருந்த நெல்களத்தை சேதமாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். கூட்டத்தில் அய்யன் வாய்க்கால் பாசனதாரர் சங்க ஒருங்கிணைப்பாளர் வீரசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்தனர்.

Next Story