சிவகிரியில் பாலம் உடைந்து லாரி கவிழ்ந்தது - நகர பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
சிவகிரியில் பாலம் உடைந்து லாரி கவிழ்ந்தது. புதிய பாலம் கட்டித்தரக்கோரி நகர பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
சிவகிரி,
நெல்லை மாவட்டம் சிவகிரியில் வடகால் ஓடையின் மேல் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் வழியாக சிவராமலிங்கபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்கள் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் சொக்கம்பட்டி அருகே உள்ள சுந்தரேசபுரத்தில் இருந்து எம்சாண்ட் மணல் அள்ளிக்கொண்டு ஒரு டிப்பர் லாரி சிவராமலிங்கபுரத்திற்கு சென்றது. பாலத்தில் சென்றபோது எதிர்பாராதவிதமாக பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. மேலும் லாரி கவிழ்ந்தது. டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். மேலும் பாலத்தின் வழியாக சென்ற தண்ணீர் குழாயும் சேதமடைந்தது. இதுகுறித்து தகவலறிந்த சிவகிரி தாசில்தார் கிருஷ்ணவேல், நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
இந்த நிலையில் பாலம் சேதமடைந்தது குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் சிவகிரி நகர பஞ்சாயத்து அலுவலகத்திற்கு திரண்டு சென்று, உடைந்த பாலத்தை உடனே சீரமைத்து தர வேண்டும் என்று கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அறிந்த நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னர். அப்போது தேர்தல் விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் முடிவடைந்ததும் புதிய பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். தொடர்ந்து அதிகாரிகள் பாலம் உடைப்பு ஏற்பட்ட பகுதிக்கு சென்று, போக்குவரத்து சீராக நடைபெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து தாலுகா அலுவலகத்திற்கு சென்று, தாசில்தார் கிருஷ்ணவேலிடம் கோரிக்கை மனு கொடுத்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story