பாலில் விஷம் கலந்து கொடுத்து 2 பெண் குழந்தைகளை கொன்ற தாய்க்கு 6 ஆண்டுகள் சிறை - வேலூர் விரைவு கோர்ட்டு தீர்ப்பு


பாலில் விஷம் கலந்து கொடுத்து 2 பெண் குழந்தைகளை கொன்ற தாய்க்கு 6 ஆண்டுகள் சிறை - வேலூர் விரைவு கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 28 Sept 2019 4:15 AM IST (Updated: 28 Sept 2019 1:48 AM IST)
t-max-icont-min-icon

பாலில் விஷம் கலந்து கொடுத்து, 2 பெண் குழந்தைகளை கொன்ற தாய்க்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் விரைவு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

வேலூர், 

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா பெருமாள்குப்பம் கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சத்யா (வயது 23). இவர்களுக்கு லத்திகா (7), ஹாசினி (3½), கீர்த்திகா மற்றும் 1½ மாதத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தது. இந்த நிலையில் சத்யா, தனக்கு நான்கும் பெண் குழந்தைகள் பிறந்ததால் மனவேதனையில் இருந்து வந்தார்.

அதைத்தொடர்ந்து 22.7.2016 அன்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சத்யா, பாலில் விஷத்தை கலந்து ஹாசினிக்கும், 1½ வயதுடைய பெண் குழந்தைக்கும் கொடுத்தார். சத்யா தானும் விஷம் கலந்த பாலை குடித்தார். அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சத்யா அனுமதிக்கப்பட்டார். டாக்டர்களின் சிகிச்சையில் அவர் உயிர்பிழைத்துக்கொண்டார். ஆனால் 2 குழந்தைகளும் இறந்தன.

இந்த சம்பவம் குறித்து மேல்பாடி போலீசார் கொலை வழக்காகப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு வேலூர் சத்துவாச்சாரி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் (விரைவு) நடந்து வந்தது. நேற்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அ.கோ.அண்ணாமலை ஆஜராகி வாதாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி குணசேகர் தீர்ப்பு கூறினார். அதில், சத்யாவுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார். இதற்கிடையே வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் சத்யாவுக்கு, 5-வதாக பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு இறந்த ஹாசினியின் பெயரையே, சத்யா சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story