‘பேனர்’ விழுந்து பெண் என்ஜினீயர் சுபஸ்ரீ பலி: அ.தி.மு.க. பிரமுகர் அதிரடி கைது
‘பேனர்’ விழுந்து பெண் என்ஜினீயர் சுபஸ்ரீ பலியான சம்பவத்தில் போலீஸ் தேடி வந்த அ.தி.மு.க. பிரமுகர் ஜெயகோபாலை தனிப்படை போலீசார் கிருஷ்ணகிரியில் நேற்று சுற்றிவளைத்து கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
சென்னையை அடுத்த குரோம்பேட்டை நெமிலிச்சேரி பவானி நகரைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ (வயது 23). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர் துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழில்நுட்ப பிரிவில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். கடந்த 12-ந் தேதி பணி முடிந்து ஸ்கூட்டரில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே அ.தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டு இருந்த பேனர் சரிந்து சுபஸ்ரீ மீது விழுந்தது. இதனால் ஸ்கூட்டரில் இருந்து நிலைதடுமாறி சாலையில் விழுந்த அவர் மீது, பின்னால் வந்த தண்ணீர் லாரி ஏறியது. இதில் சுபஸ்ரீ சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் சென்னை ஐகோர்ட்டும், பெண் என்ஜினீயர் மரணம் தொடர்பாக தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்தது. அத்துடன் பேனர்கள் வைப்பதற்கும் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.
இந்த நிலையில் சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது சென்னை பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தண்ணீர் லாரி டிரைவர் மனோஜை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் தன்னை தேடுவதை அறிந்து ஜெயகோபால் தலைமறைவானார். அவரை பிடிக்க 5 போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜெயகோபாலை தேடி வந்தனர்.
போலீசார் தன்னை தேடுவதை அறிந்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் பல்வேறு இடங்களுக்கு தப்பிச் சென்றார். நேற்று அவர் திருச்சி மற்றும் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் வந்ததையடுத்து தனிப்படை போலீசார் 2 ஊர்களுக்கும் சென்று ஜெயகோபாலை தேடினர்.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக, கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் இஸ்லாம்பூர் என்ற இடத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் பதுங்கி இருந்த ஜெயகோபாலை, இன்ஸ்பெக்டர் மகேஷ் தலைமையிலான சென்னை தனிப்படை பிரிவு போலீசார் நேற்று சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், ஒகேனக்கல்லைச் சேர்ந்த அவரது நண்பர் ரஜினி என்பவர் ஜெயகோபாலை இந்த தனியார் விடுதியில் தங்கவைத்தது தெரியவந்தது.
பின்னர், விசாரணைக்காக ஜெயகோபாலை தனிப்படை போலீசார் சென்னைக்கு அழைத்து சென்றனர்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் கூறுகையில், “சென்னை பெண் என்ஜினீயர் சுபஸ்ரீ பேனர் விழுந்து பலியான சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த ஜெயகோபால் என்பவர் கிருஷ்ணகிரி பகுதியில் பதுங்கி இருந்த போது சென்னை தனிப்படை போலீசாரால் இன்று (அதாவது நேற்று) கைது செய்யப்பட்டார். அவரை விசாரணைக்காக சென்னைக்கு கொண்டு சென்று உள்ளனர்” என்றார்.
பேனர் சரிந்து விழுந்து பெண் என்ஜினீயர் சுபஸ்ரீ பலியான சம்பவத்தில் தலைமறைவாக இருந்த அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால், 16 நாட்களுக்கு பிறகு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story