ஓசூர் புதுநகர் வளர்ச்சி குழும அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.3 லட்சம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை


ஓசூர் புதுநகர் வளர்ச்சி குழும அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.3 லட்சம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை
x
தினத்தந்தி 28 Sept 2019 3:45 AM IST (Updated: 28 Sept 2019 1:48 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர் புதுநகர் வளர்ச்சி குழும அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.3 லட்சத்தை பறிமுதல் செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நேதாஜி நகரில் புதுநகர் வளர்ச்சி குழும அலுவலகம் உள்ளது. இதன் உறுப்பினர் செயலராக யோகராஜ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த அலுவலகத்தில் ஓசூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீட்டு மனைகள் வாங்க மற்றும் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் வீடுகள் கட்ட அனுமதி வழங்க இந்த அலுவலகத்தில் லஞ்சம் வாங்குவதாக கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் நேற்று மாலை அந்த அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்து திடீர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 8 ஆயிரத்து 70 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக தொடர்ந்து நேற்று இரவு அங்கிருந்த ஊழியர்களிடமும் விசாரணை நடந்தது.

Next Story