நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் - குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை


நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் - குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 28 Sept 2019 4:15 AM IST (Updated: 28 Sept 2019 1:49 AM IST)
t-max-icont-min-icon

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என நாமக்கல்லில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் நடந்த விவாதம் பின்வருமாறு:-

விவசாயி பாலசுப்பிரமணியம்:- ‘ஈ’-அடங்கல் முறை விவசாயிகளுக்கு சிக்கலை உண்டாக்கும் வகையில் உள்ளது. எனவே வருவாய் செயலாளர் அணுகி அந்த திட்டத்தை கைவிட மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும். மோகனூர் பேரூராட்சியில் இருந்து கழிவுநீர் கால்வாயில் கலப்பதால் விவசாயம் பாதிக்கிறது. அதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மின்உற்பத்தியை தொடங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் கே.பி.எஸ்.சுரே‌‌ஷ்குமார்:- இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் இணை மின்நிலைய பணிகள் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே இந்த ஆண்டு இணைமின் நிலையம் செயல்பட தொடங்கும்.

விவசாயி பூபாலன்:- நீர்நீலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் காரணமாக மழைநீர் வீணாகிறது. எருமப்பட்டி ஒன்றியம் புதுக்கோட்டை கிராமத்தில் குளங்கள் தனியார் வசம் உள்ளது. 63 ஏக்கர் பரப்பளவு கொண்டிருந்த கரியபெருமாள் குளத்தில் தற்போது 1½ ஏக்கர்தான் உள்ளது. மீதி இடத்திற்கு பட்டா உள்ளது. இதனால் விவசாயிகள் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். எனவே நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும். அதேபோல் மயில்களால் ஏற்பட்ட சேதத்தை ஆய்வு செய்து முழுமையான ந‌‌ஷ்டஈடு பெற்றுத்தர வேண்டும். மேலும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யவேண்டும்.

கலெக்டர் மெகராஜ்:- உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயி சந்திரசேகர்:- கல்குறிச்சி வெள்ளாளப்பட்டியில் 2 குட்டைகளில் மட்டுமே குடிமராமத்து பணிகள் நடக்கிறது. மேலும் உள்ள 5 குட்டைகளிலும் அந்த பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும். கடும் வறட்சி காரணமாக 70 சதவீத தென்னை மரங்கள் காய்ந்துவிட்டது. நிவாரணம் கிடைக்க வாய்ப்பு உள்ளதா?

கலெக்டர் மெகராஜ்:- தென்னை மரங்கள் சேதம் தொடர்பாக கணக்கிடப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

விவசாயி வையாபுரி:- நாமக்கல் மாவட்டத்தில் அதிகமாக செல்லும் காவிரி தண்ணீரை தேக்கி வைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சோழசிராமணியில் இருந்து 20 கி.மீட்டர் தூரத்தில் உள்ள திருமணிமுத்தாற்றுக்கு தண்ணீரை திருப்பிவிட்டால் அனைத்து குளங்களும் நிரம்பும். அதற்காக மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும்.

கலெக்டர்:- பரிசீலனை செய்யப்படும்.

விவசாயி நல்லாகவுண்டர்:- 24 மணி நேரமும் பொதுமக்கள் குறைகளை தெரிவிக்கலாம் என கலெக்டர் கூறியதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கலெக்டர் மெகராஜ்:- மக்களின் குறைகளை எந்த நேரமும் கேட்கவேண்டியது எனது பணி. அதற்காக தான் ரூ.2 லட்சம் அரசு சம்பளம் வழங்குகிறது. எனவே அதற்காக எனக்கு நன்றி கூறவேண்டாம்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

முன்னதாக குறைதீர்க்கும் கூட்டத்தில் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலுக்கான அறிகுறிகள் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும், தீவனப்பயிர்களின் தேவை, உற்பத்தி மற்றும் பற்றாக்குறை ஆகியவை குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சேகர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பாலமுருகன், திருச்செங்கோடு உதவி கலெக்டர் மணிராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஜயலட்சுமி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Next Story