மாவட்ட செய்திகள்

பயிர் சாகுபடியுடன் கால்நடை வளர்க்க மானியம் - கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல் + "||" + Cultivation of Livestock with Crop Cultivation - Collector Sandeep Nanduri Information

பயிர் சாகுபடியுடன் கால்நடை வளர்க்க மானியம் - கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்

பயிர் சாகுபடியுடன் கால்நடை வளர்க்க மானியம் - கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்
ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பயிர் சாகுபடியுடன் ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளை வளர்க்க மானியம் வழங்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தியுடன், கால்நடைகளான ஆடு- மாடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, தேனீ வளர்ப்பு ஆகிய உப தொழில்களை விவசாயிகள் மேற்கொள்ளும் வகையில், அவர்களை ஊக்குவித்து நிரந்தர வருமானம் பெற்றிடும் வகையில் நீடித்த நிலையான வேளாண்மை திட்டம், மானாவாரி பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2019-20-ம் ஆண்டில் ஒருங்கிணைந்த பண்ணை திட்டம் 100 ஹெக்டேர் பரப்பில் ஓட்டப்பிடாரம் வட்டார பகுதியில் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்தில் பயன்பெற ஒரு ஹெக்டேர் பரப்பில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடிக்கு நிலம் வைத்திருப்பதோடு, ஆடு, மாடு, கோழி, தேனீ வளர்க்க போதுமான இடவசதி உள்ளவர்களாகவும், ஆர்வமுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். விருப்பமுள்ள விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில் 100 விவசாயிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தேர்வு செய்யப்படும் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்படுவதுடன், தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி மேற்கொள்ள 50 சதவீதம் மானியமாக ரூ.25 ஆயிரமும், 2 கறவை மாடுகள் வாங்க 50 சதவீதம் மானியமாக ரூ.30 ஆயிரமும், 10 ஆடுகள் வளர்க்க ரூ.15 ஆயிரம் மானியமும், 20 நாட்டுக்கோழிகள் வளர்க்க ரூ.6 ஆயிரம் மானியமும், மண்புழு உரம் தயாரிக்க ரூ.12 ஆயிரத்து 500 மானியமும், தேனீ வளர்ப்பை ஊக்கப்படுத்த 8 தேனீ பெட்டிகளுக்கு ரூ.12 ஆயிரத்து 800 மானியமும் என மொத்தம் ரூ.1 லட்சத்திற்கு வரையறுக்கப்பட்டு, பின்னேற்பு மானியமாக விவசாயிகளின் வங்கிக்கணக்கிற்கு வழங்கப்படும்.

தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி மற்றும் கால்நடை வளர்ப்பிற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகள் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், கால்நடை அறிவியல் நிலைய வல்லுனர்கள் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் வழங்குவது உறுதி செய்யப்படும். இந்த திட்டத்தினை செயல்படுத்த தோட்டக்கலை அலுவலர், கால்நடை உதவி மருத்துவர் கொண்ட குழு மூலம் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் ஓட்டப்பிடாரம் வட்டார விவசாயிகள் தங்கள் நில உடைமை ஆவண நகல்கள், ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு நகல்கள் மற்றும் 2 புகைப்படங்கள் ஆகியவற்றுடன் ஓட்டப்பிடாரத்தில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு விண்ணப்பித்து தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.