கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.10½ கோடியில் தாய் - சேய் உயர் சிகிச்சை பிரிவு கட்டிடம் அமைக்கும் பணி - அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்
கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.10½ கோடி செலவில் தாய்-சேய் உயர் சிகிச்சை பிரிவு கட்டிடம் அமைக்கும் பணியை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் உள்ள மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ரூ.10½ கோடி செலவில் தாய்-சேய் உயர் சிகிச்சை பிரிவு கட்டிடம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, பூமி பூஜை செய்து கட்டிடம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர், கோவில்பட்டி நகரசபை அலுவலகத்தில் நகரசபை ஊழியர்கள், துப்புரவு பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
இந்திய மருத்துவ சங்க நகர தலைவர் டாக்டர் சுப்புலட்சுமி, செயலாளர் டாக்டர் பத்மாவதி, பொருளாளர் டாக்டர் கமலா மாரியம்மாள், முன்னாள் தலைவர் டாக்டர் சீனிவாசன் ஆகியோர் நகரசபை ஊழியர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
பின்னர் கோவில்பட்டி தனியார் மண்டபத்தில் சமூகநலம், சத்துணவு திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில், அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கி, 300 கர்ப்பிணி பெண்களுக்கு மங்கள பொருட்களை வழங்கினார்.
வட்டார மருத்துவ அலுவலர் ராமமூர்த்தி தலைமையிலான மருத்துவ குழுவினர், கர்ப்பிணி பெண்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். விழாவில் 16 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.
கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச மடிக்கணினிகள் வழங்கும் விழா நடந்தது. கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகள், அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் கடந்த ஆண்டு பிளஸ்-2 பயின்ற 2,406 மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார். பின்னர் அவர், கோவில்பட்டி இனாம் மணியாச்சி சந்திப்பில் புதிய ஆவின் பாலகத்தை திறந்து வைத்தார்.
விழாவில் எம்.எல்.ஏ.க்கள் சண்முகநாதன், சின்னப்பன், கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, தாசில்தார் மணிகண்டன், நகரசபை ஆணையாளர் (பொறுப்பு) கோவிந்தராஜ், அரசு ஆஸ்பத்திரி உறைவிட மருத்துவர் பூவேசுவரி, அ.தி.மு.க. நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story