திருவண்ணாமலை மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு


திருவண்ணாமலை மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு
x
தினத்தந்தி 28 Sept 2019 3:45 AM IST (Updated: 28 Sept 2019 1:53 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் வசதிக்காக ஈசானிய மைதானம் அருகே கோவில் வைப்பு நிதியில் இருந்து பொதுப்பணித்துறை மூலமாக ரூ.28 கோடி மதிப்பீட்டில் 123 அறைகளுடன் 430 பேர் தங்கும் வகையில் ‘யாத்ரி நிவாஸ்’ என்ற விடுதி கட்டப்படுகிறது. இந்த நிலையில் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர், அதன் தலைவரான பெருந்துறை தொகுதி தோப்பு டி.என்.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தலைமையில் திருவண்ணாமலைக்கு வந்தனர்.

இந்த குழுவில் உறுப்பினர்களாக எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திரன் (பர்கூர்), கருணாநிதி (பல்லாவரம்), காந்தி (ராணிப்பேட்டை), காளிமுத்து (தாராபுரம்), நடராஜன் (பல்லடம்), மோகன் (சென்னை, அண்ணாநகர்) ஆகியோரும், தலைமை செயலக இணைச்செயலாளர் அய்யன்பெருமாள், துணைச் செயலாளர் சிவகுமாரன் உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர்.

முதலில் அவர்கள் ஈசானிய மைதானம் அருகே கட்டப்பட்டு வரும் ‘யாத்ரி நிவாஸ்’ பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது கட்டிடத்தின் அமைப்பு மற்றும் கட்டிடத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.

தொடர்ந்து அவர்கள் துரிஞ்சாபுரம் ஒன்றியம் உசாம்பாடியில் தோட்டக்கலைத்துறை மூலம் கட்டப்பட்டுள்ள பசுமை வீடுகளை நேரில் சென்று பார்வையிட்டனர்.

மேலும் கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சோமாசிபாடியில் ரூ.8 லட்சம் மதிப்பில் செயல்பட்டு வரும் மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரிக்கும் பணி மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணியினை அவர்கள் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்களிடம் இங்கு தினமும் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகம் வருகிறதா, எத்தனை கிலோ கழிவுகள் தினமும் பிரிக்கப்படுகிறது, இயற்கை உரங்கள் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து கேட்டிருந்தனர்.

அப்போது பணியாளர்கள் இங்கு சுமார் 100 கிலோ கழிவுகள் தினமும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித் தனியாக பிரித்து எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் இயற்கை உரம் கிலோ ரூ.10 என்ற விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறினர்.

தொடர்ந்து வெள்ளக்குளத்தில் ரூ.1 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் குளம் தூர்வாரும் பணிகளையும் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

பின்னர் திருவண்ணாமலை ஒன்றியத்திற்குட்பட்ட கீழ்கச்சிராப்பட்டு பகுதியில் கரும்பு வயலில் 100 சதவீதம் மானியத்தில் அமைக்கப்பட்டு உள்ள சொட்டு நீர் பாசன திட்ட அமைப்புகளை நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும் பெரியகல்லப்பாடி, தலையாம்பள்ளம், சித்தேரி ஆகிய பகுதியில் ஏரி தூர்வரும் பணிகளையும் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் தூசி கே.மோகன், கு.பிச்சாண்டி, கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, மாவட்ட மத்திய கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் பெருமாள் நகர் கே.ராஜன் மற்றும் வேளாண்மை, தோட்டக்கலை, ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

Next Story