தூங்கி கொண்டிருந்த தேசியவாத காங்கிரஸ் தேர்தலுக்கு முன்பு விழித்து கொண்டது - சஞ்சய் ராவத் சொல்கிறார்


தூங்கி கொண்டிருந்த தேசியவாத காங்கிரஸ் தேர்தலுக்கு முன்பு விழித்து கொண்டது - சஞ்சய் ராவத் சொல்கிறார்
x
தினத்தந்தி 28 Sept 2019 4:58 AM IST (Updated: 28 Sept 2019 4:58 AM IST)
t-max-icont-min-icon

சரத்பவார் மீதான அமலாக்கத்துறை நடவடிக்கையால், தூங்கி கொண்டு இருந்த தேசியவாத காங்கிரஸ் தேர்தலுக்கு முன்பு விழித்து கொண்டது என்று சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கூறினார்.

மும்பை,

மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி ஊழல் வழக்கில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ததற்கு, சிவசேனா தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இதுகுறித்து அந்த கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. மராத்தி செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

சரத்பவாருடன் எங்களுக்கு அரசியல் வேற்றுமை உண்டு. பால்தாக்கரே காலம் முதல் இந்த வேறுபாடு உள்ளது. ஆனால் மராட்டியத்தில் ஒரு கலாசாரம் உள்ளது. எங்காவது தவறு நடந்தால், ஒருவருக்கொருவர் துணை நிற்பார்கள். ராஜ்தாக்கரே மீதான அமலாக்கத்துறை நடவடிக்கையின் போது கூட அவருக்கு ஆதரவான சில கருத்துக்களை உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

சரத்பவாருக்கு எதிராக பல போராட்டங்களை நடத்திய அன்னா ஹசாரே அவர் பக்கம் நிற்கிறார். கூட்டுறவு வங்கி ஊழல் தொடர்பாக சட்டசபையில் விவாதிக்கப்பட்ட போது சரத்பவார் பெயர் குறிப்பிடப்படவில்லை என்று பா.ஜனதா முன்னாள் மந்திரி ஏக்நாத் கட்சே கூறியுள்ளார். ஊழல் வழக்கு புகாரில் சரத்பவாரின் பெயர் தெரிவிக்கப்படவில்லை. அவரது ஆதரவாளர்கள் பெயர் குறிப்பிடப்பட்ட காரணத்துக்காக சரத்பவார் ஊழல்வாதியாக்கப்பட்டு உள்ளார். இது சட்டத்தின் கீழ் வராது.

சரத்பவார் மராட்டியத்தின் மிகப்பெரிய தலைவர். அவருக்கு புகழ் உள்ளது. அவர் மதிக்கப்படும் தலைவர். இந்த வழக்கு மூலம் ஏற்பட்டு உள்ள அரசியல் வண்ணங்களை அமலாக்கத்துறை தனதாக்கி கொண்டு உள்ளது. இந்த விஷயத்தில் பா.ஜனதாவுக்கோ, அரசுக்கோ எந்த பங்கும் இல்லை.

சரத்பவார் பெயரை வழக்கில் சேர்த்ததன் காரணமாக தூங்கி கொண்டு இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி தேர்தலுக்கு முன்பு விழித்து கொண்டதை அமலாக்கத்துறை உறுதி செய்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் தூண்டி விடப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு சஞ்சய் ராவத் கூறினார்.

Next Story