சரத்பவாரின் அண்ணன் மகன் அஜித்பவார் எம்.எல்.ஏ. திடீர் ராஜினாமா


சரத்பவாரின் அண்ணன் மகன் அஜித்பவார் எம்.எல்.ஏ. திடீர் ராஜினாமா
x
தினத்தந்தி 28 Sept 2019 5:13 AM IST (Updated: 28 Sept 2019 5:13 AM IST)
t-max-icont-min-icon

சரத்பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் திடீரென தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

மும்பை,

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் அண்ணன் மகன் அஜித்பவார். அந்த கட்சியின் மூத்த தலைவரான இவர் மராட்டிய முன்னாள் துணை முதல்-மந்திரி ஆவார். பாராமதி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வந்தார்.

இந்த நிலையில் அஜித்பவார் நேற்று திடீரென சபாநாயகர் அலுவலகம் சென்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அப்போது சபாநாயகர் அங்கு இல்லை. இதனால் அவரது செயலாளரிடம் ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார்.

மராட்டிய சட்டசபைக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 21-ந் தேதி தேர்தல் நடை பெறுவதையொட்டி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பலர் ஆளும் பா.ஜனதா, சிவசேனா கட்சிகளுக்கு தாவி வருகின்றனர். அந்த வரிசையில் அஜித்பவாரும் கட்சி தாவ தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தாரா? என்ற பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் மகாராஷ்டிரா வங்கி ஊழல் வழக்கில் மும்பை போலீசார் அஜித்பவார் மற்றும் 70 பேர் மீது கடந்த ஆகஸ்டு மாதம் வழக்குப்பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் அமலாக்கத்துறையும் சில நாட்களுக்கு முன்பு அவர் மீதும், சரத்பவார் மீதும் வழக்குப்பதிவு செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் பின்னணியில் அஜித்பவார் ராஜினாமா செய்தாரா? என்ற பரபரப்பும் நிலவியது.

இதுபற்றி சரத்பவார் நேற்று இரவு புனேயில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அஜித்பவார் பதவியை ராஜினாமா செய்ததற்கான காரணம் தெரியவில்லை. ராஜினாமா குறித்து அவர் எங்களிடம் ஆலோசிக்கவும் இல்லை. அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனால் அவரது மகனை தொடர்பு கொண்டு பேசினேன். என் மீது அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்த நாளில் இருந்து தனது தந்தை மிகுந்த மனவருத்தத்தில் இருந்ததாக அவர் தெரிவித்தார். இது அவர் பதவி விலக காரணமாக இருக்கலாம். எங்களுக்குள் குடும்ப பகை எதுவும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக சபாநாயகர் ஹரிபாவு பாக்டேயிடம் கேட்டபோது, அவர் பதிலளித்து கூறியதாவது:-

சரத்பவார் எனது அலுவலகத்தில் ராஜினாமா கடித்தை கொடுத்து விட்டு எனக்கு போன் செய்தார். ராஜினாமா கடிதத்தை ஏற்கும்படி என்னை வற்புறுத்தினார். அவரது இந்த முடிவு என்னை திகைக்க செய்தது. ஏன் ராஜினாமா செய்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கான காரணத்தை பின்னர் தெரிவிப்பதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் அலுவலகம் சென்று அவரது கடிதத்தை ஆய்வு செய்தேன். அது ஏற்கக்கூடிய கடிதம் என்பதால், பதவி ராஜினாமாவை ஏற்றுக்கொண்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story