அடிப்படை வசதிகளை மேற்கொள்ள கூடுதலாக ரூ.500 கோடி ஒதுக்கீடு; வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பேட்டி


அடிப்படை வசதிகளை மேற்கொள்ள கூடுதலாக ரூ.500 கோடி ஒதுக்கீடு; வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பேட்டி
x
தினத்தந்தி 28 Sept 2019 5:30 AM IST (Updated: 28 Sept 2019 5:30 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள கூடுதலாக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட உள்ளதாக வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் கூறினார்.

பெங்களூரு, 

வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க கூடுதலாக ரூ.500 கோடி நிதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக பெலகாவிக்கு ரூ.200 கோடி, பாகல்கோட்டைக்கு ரூ.50 கோடி, ஹாவேரிக்கு ரூ.35 கோடி, ஹாசனுக்கு ரூ.15 கோடி, மைசூரு, சிக்கமகளூருவுக்கு தலா ரூ.30 கோடி, சிவமொக்காவுக்கு ரூ.10 கோடி, தார்வாருக்கு ரூ.40 கோடி, குடகுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

வீடுகளை இழந்தவர்களுக்கு மாநில அரசு புதிய வீடுகளை கட்டி கொடுக்காது. மாறாக மாநில அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும். பாதிக்கப்பட்டவர்கள், தாங்கள் விரும்பும் இடத்தில் வீடுகளை கட்டிக்கொள்ளலாம். சிக்கமகளூரு, குடகு மாவட்டங்களில் நிலச்சரிவு காரணமாக 350 ஏக்கருக்கும் அதிக பரப்பளவில் விவசாய நிலங்கள் சேதம் அடைந்துள்ளன.

விவசாய தோட்டங்களை இழந்தவர்களுக்கு மாற்று இடத்தில் நிலம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முற்றிலும் சேதமடைந்த விவசாய தோட்டங்களை மாநில அரசு எடுத்துக்கொள்ளும். தந்தை மரணம் அடைந்திருந்தால் அவர்களின் சொத்து கணக்கை வாரிசுகளுக்கு மாற்றும் பணிகள் இன்று(அதாவது நேற்று) முதல் தொடங்கியுள்ளன.

மரணம் அடையும் ஏழைகளின் உடல் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்திற்கு முதல் கட்டமாக ரூ.18 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏழைகள் இறந்தால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் இறுதிச்சடங்கு நடத்த ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது. விதவை, முதியோர் உதவித்தொகையை சரியான நேரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த திட்டத்தில் உள்ள பயனாளர்களின் கணக்கில் ஆதார் எண் இணைக்கப்படும்.

இவ்வாறு ஆர்.அசோக் கூறினார். 

Next Story