பா.ஜனதாவின் ஏஜெண்டாக செயல்படும் தேர்தல் ஆணையம்; தினேஷ் குண்டுராவ் பரபரப்பு குற்றச்சாட்டு


பா.ஜனதாவின் ஏஜெண்டாக செயல்படும் தேர்தல் ஆணையம்; தினேஷ் குண்டுராவ் பரபரப்பு குற்றச்சாட்டு
x

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை போய்விட்டது என்றும், அது பா.ஜனதாவின் ஏஜெண்டாக செயல்படுகிறது என்றும் தினேஷ் குண்டுராவ் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.

பெங்களூரு, 

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

தகுதி நீக்க எம்.எல்.ஏ.க் களின் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தனது விசாரணையை ஒத்திவைத்துள்ளது. தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை ஒத்திவைத்துள்ளது. சபாநாயகர் எடுத்த முடிவு சரியல்ல என்றும், சுப்ரீம் கோர்ட்டில் அது ரத்து செய்யப்படும் என்றும் பா.ஜனதாவினர் கூறி வந்தனர்.

அவர்கள் கூறியது போல் சுப்ரீம் கோர்ட்டில் எதுவும் நடைபெறவில்லை. உடனே தீர்ப்பு வழங்கவில்லை. சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்யவில்லை. இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பிரதிவாதியாக இடம் பெறவில்லை. ஆனால் தேர்தல் ஆணையம் சார்பில் ஒரு வக்கீல் தாமாக முன்வந்து, எக்காரணம் கொண்டும் இடைத்தேர்தலை நிறுத்தி வைக்க முடியாது என்று சொல்கிறார்.

அதே வக்கீல் மறுநாள் வந்து, இந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை இடைத்தேர்தலை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறார். தேர்தல் ஆணையத்தின் இந்த முரண்பாடான நிலை ஏன்?. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது எங்களுக்கு இருக்கும் சந்தேகத்தை இச்சம்பவம் அதிகரித்துள்ளது. தேர்தல் ஆணையம் சமரசம் செய்து கொண்டுவிட்டது. அந்த ஆணையத்தின் மீதான நம்பிக்கை போய்விட்டது.

நாங்கள் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி, எந்த அடிப்படையில் இடைத்தேர்தலை ஒத்தி வைத்துள்ளர்கள் என்று கேட்க முடிவு செய்துள்ளோம். தேர்தல் ஆணையம் பா.ஜனதாவின் ஏஜெண்டாக செயல்படுகிறது. இந்த விஷயத்தில் நாங்கள் சட்ட போராட்டம் நடத்துவோம்.

இந்திய வரலாற்றில், முதல் முறையாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது. சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, கணக்கு தணிக்கை துறை, ரிசர்வ் வங்கி என அனைத்து அரசியல் சாசன அமைப்புகளும் சமரசம் செய்து கொண்டுவிட்டன.

இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார். 

Next Story