அதிகாரி திட்டியதால் தற்கொலை முயற்சி, அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டம்
தற்கொலைக்கு முயன்ற ஊழியரை திட்டிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த நாகராஜன் மனைவி பரமேஸ்வரி (வயது 36). இவர் நத்தர்ஷாதெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக பணிச்சுமையில் மிகுந்த மனஉளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் உயர் அதிகாரி ஒருவர், அவரை திட்டியதாக தெரிகிறது. இதனால் மன முடைந்த பரமேஸ்வரி நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதையடுத்து அவர், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி அறிந்த அங்கன்வாடி ஊழியர்கள் மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். மேலும் பரமேஸ்வரியை திட்டிய அதிகாரியை கண்டித்து சாலை மறியலிலும் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அங்கன்வாடி ஊழியர்கள் ஏராளமானோர் திரண்டு வந்தனர். பரமேஸ்வரியை திட்டிய அதிகாரி மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர் சங்க மாவட்ட தலைவி தமிழ்செல்வி தலைமை தாங்கினார்.
இதில் மாநில செயலாளர் ரத்தினமாலா, பொருளாளர் பாக்கியம், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார். இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கும்படி, கலெக்டர் விஜயலட்சுமியை சந்தித்து மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story