குடிசைமாற்று வாரியத்தில் வீடு வாங்கித்தருவதாக கூறி ரூ.24 லட்சம் மோசடி - 3 பேர் மீது வழக்கு
குடிசை மாற்றுவாரியத்தில் வீடு வாங்கித்தருவதாக கூறி ஏராளமானவர்களிடம் ரூ.24 லட்சம் மோசடி நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை நகர குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது:-
கோவை,
கோவை வெள்ளலூர், உக்கடம், கோவைப்புதூர், கீரணத்தம் ஆகிய பகுதிகளில் குடிசைமாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளில் குளக்கரையோரம் குடியிருப்பவர்கள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன.
இந்த வீடுகளை வாங்கித்தருவதாக பலரும் மோசடி செய்து வருகிறார்கள். ஏற்கனவே உக்கடம் பகுதியை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர்கள் உள்பட பலரிடம் வீடுகள் ஒதுக்கீடு செய்வதாக கூறி ரூ.40 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம்வரை 3 பேர் வசூலித்துள்ளனர். கிழக்கு பார்த்த வாசல் வீ்ட்டை ஒதுக்கீடு செய்ய வேண்டுமானால் கூடுதல் பணம் தர வேண்டும் என்றும் கேட்டு வாங்கியுள்ளனர். இதனை நம்பி ஏராளமானவர்கள் பணம் செலுத்தினார்கள். ஆனால் வீடுகளை ஒதுக்கீடு செய்ய எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இதுகுறித்து பீளமேட்டை சேர்ந்த சக்திவேல் என்பவர் கோவை நகர மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ரூ.24 லட்சத்துக்கும் மேல் மோசடி நடைபெற்று இருப்பது தெரியவந்தது. பின்னர் இதுதொடர்பாக கோவையை சேர்ந்த லட்சுமணன், கிருஷ்ணன், சரவணன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story