கைதிகளுக்கு கொடுப்பதற்காக கஞ்சா பதுக்கிய - கோவை சிறை காவலர் பணியிடை நீக்கம்
கைதிகளுக்கு கொடுக்க கஞ்சாவை பதுக்கி வைத்ததாக கோவை சிறை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கோவை,
கோவை மத்திய சிறையில் 1,500-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறை கைதிகளுக்கு கஞ்சா, செல்போன் உள்ளிட்டவை சப்ளை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் சிறைத்துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக கோவை சிறைக்குள் சோதனை நடத்தினர்.
இதில் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு இருக்கும் சிறைக்குள் 7 செல்போன்கள், சிம் கார்டுகள், சார்ஜர்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. இந்த செல்போன்களை பயன்படுத்தியது யார்?. யார், யாருடன் பேசி உள்ளனர் என்பது தொடர்பாக சிறைத்துறை நிர்வாகத்தினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை மத்திய சிறையில் பணியாற்றிய 2-ம் நிலை காவலர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் தண்டனை கைதிகளுக்கு சப்ளை செய்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறை வளாகத்துக்குள் கஞ்சா கடத்தி சென்று பதுக்கி வைத்துள்ளார். இது சிறையில் காவலர்கள் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிறைக்காவலர் கிருஷ்ணமூர்த்தியை பணியிடை நீக்கம் செய்து சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் கூறும் போது, கிருஷ்ணமூர்த்தி கஞ்சா பதுக்கிய விவகாரம் தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது. மேலும் இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது. இதுதவிர சிறை வளாகத்தில் தொடர்ந்து தீவிர சோதனை செய்யப்பட்டு வருகிறது என்றார். கைதிகளுக்கு சப்ளை செய்வதற்காக சிறைக்குள் கஞ்சா கடத்தி சென்று பதுக்கிய சிறை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story