கன்னியாகுமரியில் நேருயுவ கேந்திரா தொண்டர்களுக்கான பயிற்சி முகாம் விஜயகுமார் எம்.பி. தொடங்கி வைத்தார்


கன்னியாகுமரியில் நேருயுவ கேந்திரா தொண்டர்களுக்கான பயிற்சி முகாம் விஜயகுமார் எம்.பி. தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 29 Sept 2019 4:15 AM IST (Updated: 28 Sept 2019 8:06 PM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் நேருயுவ கேந்திரா தொண்டர்களுக்கான பயிற்சி முகாம் தொடங்கியது. இதை விஜயகுமார் எம்.பி. தொடங்கி வைத்தார்.

கன்னியாகுமரி,

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல நேருயுவ கேந்திரா சார்பில், தேசிய இளையோர் தொண்டர்களுக்கான 15 நாட்கள் பணிமுன் பயிற்சி முகாம் கன்னியாகுமரியில் நேற்று தொடங்கியது. இந்த முகாமை விஜயகுமார் எம்.பி. குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மண்டல இயக்குனர் எம்.என். நட்ராஜ்,  உதவி இயக்குனர் எஸ்.செந்தில்குமார், நிர்வாகிகள் ஜி.தினேஷ் குமார், பிரவீன்குமார் உள்பட பலர் பங்கேற்றனர். கன்னியாகுமரியில் 15 நாட்கள் நடக்கும் முகாமில், திருநெல்வேலி, மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள தேசிய இளையோர் தொண்டர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெறுகிறார்கள்.

விளையாட்டு உபகரணங்கள்

விழாவில், குமரி மாவட்டத்தில் உள்ள 20 இளைஞர் மன்றங்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள விளையாட்டு உபகரணங்களை, விஜயகுமார் எம்.பி. வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

இளைஞர்கள் நாட்டின் மிகப்பெரிய சக்தியாகும். நேரு யுவ கேந்திரா சார்பில் அளிக்கப்படும் இப்பயிற்சியில் முழு ஈடுபாட்டுடன் பங்கேற்று, நாட்டுக்கு பல ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசால் செயல்படுத்தப்படும் இலவச வீடு, கியாஸ் இணைப்பு போன்ற திட்டங்களை மக்கள் மத்தியில் இளைஞர்கள் முன்எடுத்து செல்ல வேண்டும்.

அரசியல்வாதிகளுக்கு, மத்திய அரசின் திட்டங்களை அனைத்து தரப்பு மக்களிடம் கொண்டு செல்ல நேரு யுவ கேந்திராவின் இளைஞர்கள் உதவி புரிய வேண்டும்.

விமான நிலையம்

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் உள்ள முக்கடல் சங்கமிக்கும் இடத்தை உலகத்தின் 8–வது அதிசயமாக அறிவிக்க வேண்டும். உலகத்தரத்தில் கன்னியாகுமரி கடற்கரையை மணல்பரப்பி அழகுபடுத்த வேண்டும், கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் வழங்கியுள்ளேன். இவற்றை செயல்படுத்த பிரதமர் அனுமதி அளித்தால், குமரி மாவட்டம் மேலும் வளர்ச்சி அடையும். இவற்றை பிரதமரால் மட்டுமே செய்ய முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story