வில்லுக்குறியில் சாலைகளை சீரமைக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் மறியல் போராட்டம்


வில்லுக்குறியில் சாலைகளை சீரமைக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 28 Sep 2019 11:00 PM GMT (Updated: 2019-09-28T21:16:28+05:30)

சாலைகளை சீரமைக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 2 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

வில்லுக்குறி,

திங்கள்நகர்– வில்லுக்குறி, குளச்சல்– கருங்கல் மற்றும் நாகர்கோவில்– திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலைகள் குண்டும்– குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சாலைகளால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.  

இந்த சாலைகளை சீரமைக்க வேண்டுமென்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரின்ஸ் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தார். மேலும் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் பொதுமக்களை திரட்டி சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என்றும் அறிவித்தார்.

 2 எம்.எல்.ஏ.க்கள்

அதன்படி நேற்று காலை 10.30 மணிக்கு வில்லுக்குறி சந்திப்பில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு பிரின்ஸ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் மற்றும் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குமரி மாவட்ட துணைத்தலைவர் வேலுப்பிள்ளை, காங்கிரஸ் மேற்கு மாவட்ட பொருளாளர் டாக்டர் சாமுவேல் ஜார்ஜ், செயலாளர் புரோடி மில்லர், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி சஜிதா, இளைஞர் காங்கிரஸ் தலைவர் தேவ் திவாகர், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் அனந்த கிருஷ்ணன், வின்சென்ட்ராஜ், ஜெரால்டு கென்னடி, கிளாட்சன், டென்னீஸ், சந்திரசேகர் உட்பட 200–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் சாலைகளை சீரமைக்க கோரியும், பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க. ஆட்சியை கண்டித்தும் கோ‌ஷங்களை எழுப்பப்பட்டது.

பேச்சுவார்த்தை

உடனே இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும்,  காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சாலைகளை ஒரு வாரத்தில் சீரமைப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story