நெல்லை-சங்கரன்கோவில் பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் 2,091 சுகாதார பணியாளர்கள் தீவிரம் - கலெக்டர் ஷில்பா தகவல்
நெல்லை, சங்கரன்கோவில் பகுதியில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த 2,091 சுகாதார பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளதாக கலெக்டர் ஷில்பா தெரிவித்தார்.
நெல்லை,
நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு, தடுப்பு பணிகளில் ஈடுபடுவது குறித்த பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு அரசு மழைக்காலத்தையொட்டி வருமுன் காப்போம் என்ற இலக்கின் கீழ் பல்வேறு திட்டப்பணிகளை நிறைவேற்றி வருகிறது. குறிப்பாக டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பணியை மழைக்காலத்துக்கு முன்னதாக தொடங்கி உள்ளது.
இந்த பணிகளில் மாநகராட்சி துப்புரவுபணியாளர்கள், தூய்மை காவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் கடந்த ஆண்டு வீடு, வீடாக சென்று ஆய்வு செய்தனர். கொசு உற்பத்தியாகும் நல்ல தண்ணீர் தேங்கி இருந்த இடங்கள், தேங்காய் ஓடுகள், டயர்கள், டப்பாக்களை அகற்றினார்கள். அதனால் டெங்கு பாதிப்பு வெகுவாக குறைந்து, நெல்லை மாவட்டத்தில் டெங்கு கட்டுப்படுத்தப்பட்டது. நடப்பாண்டில் அந்த அளவுக்கு பாதிப்பு இல்லாத வகையில் தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் பூட்டி கிடக்கும் வீடுகளில் ஆய்வு செய்து தகவல் தெரிவித்து, துப்புரவு பணிகளை செய்ய வேண்டும். மேலும் கை கழுவுதல், தன் சுத்தம் பேணுதல், திறந்த வெளியில் மலம் கழிக்காமல் சுகாதார வளாகத்தை பயன்படுத்துதல் போன்ற நல்ல பழக்க வழக்கங்களை ஏற்படுத்தும் வகையில் பொது மக்கள் மத்தியில் மீண்டும், மீண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
நெல்லை மாநகர பகுதி மற்றும் சங்கரன்கோவில் நகர பகுதியிலும் டெங்கு தடுப்பு பணியில் 2,091 சுகாதார பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கொசு உற்பத்தி தடுப்பு மருந்தான ‘டெமிபால்ஸ்’ 6 ஆயிரம் லிட்டர் கை இருப்பு உள்ளது. அந்த பகுதியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் டெங்கு காய்ச்சல் பரவாமல் உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் நெல்லை சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார், மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story