குற்றாலத்தில் அலை மோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம் - நீண்ட வரிசையில் நின்று அருவியில் உற்சாக குளியல்


குற்றாலத்தில் அலை மோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம் - நீண்ட வரிசையில் நின்று அருவியில் உற்சாக குளியல்
x
தினத்தந்தி 29 Sept 2019 3:30 AM IST (Updated: 29 Sept 2019 8:43 AM IST)
t-max-icont-min-icon

குற்றாலத்தில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் நீண்ட வரிசையில் நின்று அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

தென்காசி, 

பிரசித்திபெற்ற சுற்றுலா தலமான குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த ஆண்டு சீசன் தாமதமாக தொடங்கியது. சீசன் முடிந்த ஆகஸ்டு 15-ந் தேதிக்கு பிறகும் அருவிகளில் தண்ணீர் விழுந்து கொண்டே இருக்கிறது.

இந்த மாதம் மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்த சாரல் மழையினால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. எனவே, சுற்றுலா பயணிகள் தினமும் குற்றாலத்துக்கு வந்து ஆனந்தமாக குளித்து செல்கின்றனர். இடையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுந்ததால் கூட்டம் இன்றி சுற்றுலா பயணிகள் நன்றாக குளித்து சென்றனர். தற்போது பள்ளிகளில் காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால் நேற்று குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

அதிகமான சுற்றுலா பயணிகள் வந்ததாலும், அருவிகளில் தண்ணீர் குறைவாக விழுவதாலும் அவர்களை நீண்ட வரிசையில் நின்று குளிக்க போலீசார் அனுமதித்தனர். ஆண்களும், பெண்களும் தனித்தனியாக நீண்ட வரிசையில் நின்று உற்சாகமாக குளித்துச் சென்றனர். மேலும் நேற்று மகாளய அமாவாசை என்பதால் காலையில் இருந்தே ஏராளமானோர் குற்றாலம் அருவிகளில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

Next Story