புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
முருகபவனம்,
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பார்கள். இதையொட்டி பக்தர்கள் நெற்றியில் நாமம் இட்டு விரதம் மேற்கொண்டு பெருமாளை வழிபடுவது வழக்கம். புரட்டாசி மாதத்தின் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அதன்படி திண்டுக்கல் எம்.வி.எம்.நகர் தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் சாமிக்கு பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது.
அதன்பிறகு பெருமாளுக்கு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதேபோல் உற்சவர் பெருமாள், தாயாருக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. கோவிலில் உள்ள தும்பிக்கையாழ்வார் மற்றும் பக்த ஆஞ்சநேயருக்கு தங்க கவச அலங்காரம் நடந்தது.
திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாசப்பெருமாள் கோவிலில், புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி அதிகாலை 5 மணியளவில் பால், பழம் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மூலவருக்கு காய்கறி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
கோவில் மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாசப்பெருமாளுக்கு சிறப்பு அலங்காரமும், ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடுகளும் நடந்தன. இதேபோல் திண்டுக்கல் நாகல்நகர் வரதராஜப்பெருமாள் கோவிலில் சாமிக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேகம், கல்அங்கி அலங்காரம் நடைபெற்றது.ஆஞ்சநேயருக்கும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன.
மேலும் திண்டுக்கல் மெயின்ரோடு ஆஞ்சநேயர் கோவில், கோபால சமுத்திரம் பால ஆஞ்சநேயர் கோவில், முள்ளிப்பாடி ஆஞ்சநேயர் கோவில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
சின்னாளபட்டி ஸ்ரீராம அழகர் தேவஸ்தானம் சார்பில், பிருந்தாவன தோப்பு லட்சுமி நாராயணன் கோவிலில் அன்னதானம் நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் லட்சுமி நாராயணனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், பூஜை, தீபாராதனை நடந்தது. அதன்பிறகு அன்னதானம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் சின்னாளபட்டியில் உள்ள மேட்டுபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பழனி பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அந்தவகையில் பழனி மேற்கு ரதவீதியில் உள்ள லட்சுமி நாராயண சுவாமி கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடந்தது. இதில் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். அவ்வாறு வந்த பக்தர்கள் துளசி மாலை வாங்கி வந்து சாமிக்கு சாத்தி வழிபட்டனர்.
இதேபோல் பட்டத்து விநாயகர் கோவில் அருகே உள்ள பெருமாள் கோவில், பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோவில், சத்திரப்பட்டி அருகே விருப்பாட்சி தலையூத்து அருவி பகுதியில் அமைந்துள்ள நீலவரதராஜ பெருமாள், நல்காசி விஸ்வநாதர் கோவில்களிலும் சாமிக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனைகள், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story