ஆலாந்துறை அருகே பரிதாபம் மின்சாரம் தாக்கி காட்டு யானை சாவு
ஆலாந்துறை அருகே மின்சாரம் தாக்கி காட்டு யானை பரிதாபமாக இறந்தது.
பேரூர்,
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை வனச்சரக பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்பட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. இந்த யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தைவிட்டு வெளியேறி விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன.
இதனால் மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் யானைகள் விளைநிலங்களுக்குள் புகுவதை தடுக்க விவசாயிகள் மின்வேலி அமைக்கின்றனர்.
இந்தநிலையில் மதுக்கரை வனச்சரகம் ஆலாந்துறை கல்கொத்தி மலைவாழ் கிராமம் அருகே அய்யாசாமி (வயது 60) என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இதை ஆலாந்துறை விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த ஜெயராம் (50) என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். 10 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த நிலத்தில், 5 ஏக்கரில் வாழை பயிரிட்டு உள்ளார்.
இந்த பகுதியில் காட்டு யானை நடமாட்டம் அதிகம் என்பதால் ஜெயராம், யானைகள் தோட்டத்திற்குள் நுழைய முடியாத வகையில் தோட்டத்தை சுற்றி மின்வேலி (12 வோல்ட் பேட்டரி அளவு) அமைத்து இருந்தார்.
அந்த தோட்டத்திற்குள் நுழைவதற்காக 3 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை மின்வேலியை சேதப்படுத்த முயன்றது. அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கியதில் அந்த காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது.
இது குறித்த புகாரின் பேரில் மதுக்கரை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள், இறந்து கிடந்த காட்டு யானையை பார்வையிட்டனர். வனத்துறையினர் நடத்திய விசாரணையில், மின்சாரம் தாக்கி காட்டு யானை இறந்தது தெரிய வந்தது. மின்சாரம் தாக்கி காட்டு யானை இறந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story