கோவில்பட்டியில் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


கோவில்பட்டியில் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 28 Sep 2019 10:30 PM GMT (Updated: 29 Sep 2019 3:15 AM GMT)

கோவில்பட்டியில் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டி அருகே உள்ள பூசாரிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஒரு சமுதாயத்தை சேர்ந்த பொதுமக்கள் பலர் நேற்று காலையில், கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வந்தனர். அவர்கள் திடீரென துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனை அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது ஊர்மக்கள் கூறும் போது, எங்கள் பகுதியில் நாங்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். எங்கள் ஊரில் எங்கள் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட கோவில் உள்ளது. அந்த கோவிலுக்கு சொந்தமான காலி இடத்தை, எங்கள் ஊரை சேர்ந்த மற்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டு வருகிறது.

எனவே போலீஸ் பாதுகாப்புடன் எங்கள் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட இடத்தை முறையாக அளவீடு செய்து வழங்க வேண்டும். அதே நேரத்தில் எங்கள் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறினார்.

இதனையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், கண்டிப்பாக போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். போலீஸ் பாதுகாப்புடன் வருவாய் துறை மூலம் இடம் அளந்து கொடுக்கப்படும் என்று உறுதியளித்தார். அதன் பின்னர் பொதுமக்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.

Next Story