செல்போன் ஒட்டுக்கேட்பு வழக்கு: 2 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு சி.பி.ஐ. நோட்டீசு அனுப்ப வாய்ப்பு
செல்போன் ஒட்டுக்கேட்பு வழக்கு தொடர்பாக பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் உள்பட 2 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு சி.பி.ஐ. நோட்டீசு அனுப்ப வாய்ப்புள்ளது. இந்த நிலையில், ‘விசாரணைக்கு ஆஜராக கூறினால் உரிய விளக்கம் அளிப்பேன்‘ என பாஸ்கர்ராவ் கூறினார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சியில் முதல்-மந்திரியாக குமாரசாமி இருந்தார். இந்த வேளையில் அரசியல் கட்சி தலைவர்கள், போலீஸ் அதிகாரிகளின் செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தன.
இதைதொடர்ந்து முதல்-மந்திரி எடியூரப்பா, செல்போன் உரையாடல் ஒட்டுக்கேட்பு பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தப்படும் என்று உத்தரவிட்டார். அதன்படி சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
செல்போன் உரையாடல் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் பெங்களூரு முன்னாள் மாநகர போலீஸ் கமிஷனர் அலோக் குமாருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனால் ஓசூர் ரோட்டில் உள்ள அலோக்குமாரின் வீட்டிலும், நிருபதுங்கா ரோட்டில் உள்ள அவருடைய அலுவலகத்திலும் கடந்த 26-ந் தேதி சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின்போது அலோக் குமாரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினமும் 2-வது நாளாக அலோக் குமாரிடம், சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சில கேள்விகளுக்கு முரண்பட்ட தகவல்களை பதிலாக அளித்ததாக சொல்லப்படுகிறது. அத்துடன் செல்போன் உரையாடல் ஒட்டுக்கேட்பின் ஆடியோ அடங்கிய ‘பென்டிரைவ்‘ பற்றியும் சி.பி.ஐ. அதிகாரிகள் கேட்டுள்ளனர்.
செல்போன் ஒட்டுக்கேட்பு தொடர்பாக கடந்த ஆண்டு (2018) ஆகஸ்டு மாதத்தில் இருந்து இந்த ஆண்டு (2019) ஆகஸ்டு மாதம் வரை சி.பி.ஐ. விசாரணை நடத்த உள்ளது. இந்த காலக்கட்டத்தில் பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த அலோக் குமாரிடம் விசாரணை நடைபெற்று உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சுனில் குமாரும் பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி உள்ளார்.
இதனால் சுனில் குமாரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் தற்போதைய பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ், இந்த பொறுப்புக்காக காங்கிரஸ் பிரமுகர் ஒருவரிடம் பேசும் உரையாடல் ஒன்றும் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற காரணங்களினால் விசாரணைக்கு ஆஜராகும்படி ஐ.பி.எஸ். அதிகாரிகளான சுனில் குமார், பாஸ்கர்ராவ் ஆகியோருக்கும் சி.பி.ஐ. நோட்டீசு அனுப்ப வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளள.
இதுகுறித்து பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் நேற்று கூறுகையில், ‘செல்போன் உரையாடல் ஒட்டுக்கேட்பு தொடர்பாக சி.பி.ஐ. சார்பில் எந்த நோட்டீசும் எனக்கு வரவில்லை. ஒருவேளை விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீசு வந்தால் விசாரணைக்கு ஆஜராகி உரிய முறையில் விளக்கம் அளிப்பேன். தற்போது வரை நோட்டீசு வரவில்லை என்பதால் அதுபற்றி பேசுவதில் அர்த்தம் இல்லை. யூகத்தின் அடிப்படையில் எழும் கேள்விகளுக்கு நான் ஒருபோதும் பதில் அளிக்கமாட்டேன்‘ என்றார்.
Related Tags :
Next Story