மத்திய அரசின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது: சித்தராமையா குற்றச்சாட்டு


மத்திய அரசின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது: சித்தராமையா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 29 Sept 2019 10:27 AM IST (Updated: 29 Sept 2019 10:27 AM IST)
t-max-icont-min-icon

15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவித்திருப்பதன் மூலம் மத்திய அரசின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்று சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை தள்ளிவைக்க தேர்தல் ஆணையம் ஒப்புக் கொண்டது. இதையடுத்து, இடைத்தேர்தலுக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த நிலையில், அதே 15 தொகுதிகளுக்கு டிசம்பர் மாதம் 5-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று நேற்று முன்தினம் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது;-

மாநிலத்தில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இடைத்தேர்தலை நடத்துவதில் இந்திய தேர்தல் ஆணையத்தின் முடிவு என்ன? என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை. மத்திய அரசின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுவது மட்டும் புரிகிறது. முதலில் இடைத்தேர்தலுக்கான தேதியை அறிவித்தார்கள். பின்னர் இடைத்தேர்தலை தள்ளிவைப்பதாக கூறினார்கள். தற்போது திடீரென்று இடைத்தேர்தல் அறிவித்திருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.

இடைத்தேர்தலை எந்த நேரத்தில் நடத்தினாலும், அதனை சந்திக்க காங்கிரஸ் கட்சி தயாராக இருக்கிறது. ஆனால் மாநிலத்தில் இடைத்தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் ஆணையம் நடந்து கொள்ளும் விதம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்து கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Next Story