காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார்


காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார்
x
தினத்தந்தி 29 Sep 2019 6:57 AM GMT (Updated: 29 Sep 2019 6:57 AM GMT)

காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஜான் குமார் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். நாளை அவர் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

புதுச்சேரி,

புதுவை காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. மொத்தம் 9 பேர் விருப்ப மனு செய்தனர். அவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது.

இவர்களில் சீட் பெற ஜான்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. அண்ணாமலை ரெட்டியார் மகன் ஜெயக்குமார் ஆகியோர் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. ஜான்குமாருக்கு ஆதரவாக முதல்-அமைச்சர் நாராயணசாமியும், ஜெயக்குமாருக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயமும் களம் இறங்கினார்கள்.

இதற்கிடையே ஜான்குமார் தான் வகித்து வந்த புதுவை அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இந்தநிலையில் வேட்பாளரை இறுதி செய்வதற்காக முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் டெல்லி சென்றனர். அவர்களுடன் வைத்திலிங்கம் எம்.பி.யும் சென்றார்.

டெல்லியில் காங்கிரஸ் மேலிட பார்வையாளர்களான முகுல்வாஸ்னிக், சஞ்சய்தத் ஆகியோருடன் வேட்பாளர் தேர்வு தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதனால் பல சுற்றுகள் பேச்சு வார்த்தை நடந்தது.

இறுதியில் ஜான்குமார் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். இதுகுறித்த தகவல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு தெரிவிக்கப்பட்டது. அவரும் இதற்கு ஒப்புதல் அளித்தார்.

இதைத்தொடர்ந்து காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. ஜான்குமார் நேற்று பிற்பகல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். இதற் கான அறிவிப்பினை காங்கிரஸ் மேலிட பார்வையாளர் முகுல்வாஸ்னிக் வெளியிட்டுள்ளார்.

இதையொட்டி புதுவை வைசியாள் வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாநில தலைவர் நமச்சிவாயம் தலைமையில் தொகுதி நிர்வாகிகள் செயல் வீரர்கள் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

இதில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சர் கந்தசாமி, வேட்பாளர் ஜான் குமார் உள்பட தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் தேர்தல் பணியாற்றுவது குறித்தும், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரசை வெற்றிபெற செய்வது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஜான்குமார் நாளை (திங்கட்கிழமை) பகல் 12 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இதில் காங்கிரஸ், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ளும்படி மாநில தலைவர் நமச்சிவாயம் அழைப்பு விடுத்துள்ளார்.

Next Story