எடப்பாடி தொகுதியில் ரூ.4¼ கோடியில் புதிய திட்டப்பணிகள்: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
எடப்பாடி தொகுதியில் ரூ.4¼ கோடியில் புதிய திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
சேலம்,
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதி கச்சுப்பள்ளியில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகள் தொடக்க விழா நேற்று மாலை நடந்தது. இதில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ரூ.4 கோடியே 32 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட 11 கட்டிடங்களை திறந்து வைத்தும், புதிய குடிநீர் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
எடப்பாடி, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி ஆகிய மூன்று ஒன்றியங்களை உள்ளடக்கி ஒரு கூட்டுக் குடிநீர் திட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டது. ஆனால் சில பகுதிகள் விடுபட்டிருப்பதாக பல்வேறு தரப்பினரும் வேண்டுகோள் வைத்த காரணத்தினால் தற்போது எடப்பாடி, கொங்கணாபுரம் ஒன்றியங்களில் குடிநீர் கிடைக்காத 137 குடியிருப்புகளுக்கு ரூ.23 கோடியே 52 லட்சம் மதிப்பீட்டில் மறுசீரமைப்பு மற்றும் புனரமைப்பு திட்டத்தின் கீழ் எடப்பாடி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் புதிய குடிநீர் திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. இதன்மூலம் 137 குடியிருப்பு பகுதிகளுக்கும் பாதுகாக்கப்பட்ட காவிரி தண்ணீர் கிடைக்கும். கடுமையான வறட்சியிலும் கொங்கணாபுரம் பகுதிகளில் குடிநீர் பிரச்சினை இருக்காது.
எட்டிக்குட்டைமேட்டில் புதிதாக சிட்கோ தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுத்து அங்கு விரைவாக தொழில் உற்பத்தி துவங்கப்படும்.
திருச்செங்கோட்டில் இருந்து சங்ககிரி, கொங்கணாபுரம் வழியாக ஓமலூர் வரை செல்வதற்கு 4 வழிச்சாலை பணிகள் விரைவில் தொடங்கப்படும். இந்த பகுதி ஒரு வறட்சியான பகுதியாகும். விவசாயத்திற்கு தேவையான நீர் கிடைப்பதில்லை. பருவமழை பொய்க்கின்ற காரணத்தினால், தண்ணீர் பிரச்சனை ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண வேண்டும் என்றால் இந்த பகுதியில் உள்ள ஏரிகள், குளங்களில் தண்ணீர் நிரப்பப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளர்கள்.
அந்த கோரிக்கையை நிறைவேற்றுகின்ற விதமாக, மேட்டூர் அணையின் உபரி நீரை ரூ.565 கோடியில் நீரேற்றுத் திட்டத்தின் மூலமாக, கொங்கணாபுரம் மற்றும் கச்சுப்பள்ளி பகுதிகளில் இருக்கின்ற ஏரிகளில் நிரப்பப்படும். இந்த பணிகள் இன்னும் 5 மாதத்தில் தொடங்கப்படும்.
தமிழ்நாட்டில் 234 தொகுதிகள் இருந்தாலும், தமிழ்நாட்டில் எந்த பகுதிக்கும் சென்றாலும், நாங்கள் எடப்பாடியில் இருந்து வருகிறோம். முதல்-அமைச்சர் தொகுதியில் இருந்து வருகிறோம் என்று சொன்னால் தனி மரியாதை இருக்கிறது. நான் உங்களை முதல்-அமைச்சராக இருந்து பார்க்கவில்லை. நீங்கள் எல்லாம் முதல்-அமைச்சராக என்னை உருவாக்கி தந்திருக்கின்றீர்கள். மக்களுக்கு தேவையான திட்டங்களை அளிப்பது தான் என்னுடைய லட்சியம். நான் உங்கள் வீட்டில் ஒருவனாக இருந்து, இந்த பகுதி மக்களின் நலனுக்காக என்றென்றும் பாடுபடுவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக ரூ.2 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் எடப்பாடி நகராட்சி பஸ் நிலையம் அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய வணிக வளாகம் மற்றும் கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கச்சுப்பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி கூடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். பின்னர் அவர் விளையாட்டு வீரர்களுடன் உடற்பயிற்சி கூடத்தில் சிறிது நேரம் பேட்மிண்டன் விளையாடினார்.
இந்த விழாவில் கலெக்டர் ராமன், அட்மா திட்டக்குழு தலைவர் கரட்டூர் மணி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் ராஜேந்திரன், மாதேஸ்வரன், சேலம் ஆவின் தலைவர் ஜெயராமன், எடப்பாடி முன்னாள் நகர்மன்ற தலைவர் கதிரேசன், கூட்டுறவு சங்க தலைவர்கள் பிரேம்சந்தர், முத்துசாமி, மணி, மாணிக்கம், பழனிசாமி, வெங்கடேஷ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஜிந்தா வரதராஜன், கூட்டுறவு அச்சக தலைவர் கந்தசாமி, பேரூராட்சி முன்னாள் தலைவர் சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story