மதுரை, திருச்சியில் போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்த 8 பேர் கைது


மதுரை, திருச்சியில் போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்த 8 பேர் கைது
x
தினத்தந்தி 30 Sept 2019 4:30 AM IST (Updated: 29 Sept 2019 11:56 PM IST)
t-max-icont-min-icon

மதுரை, திருச்சியில் போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை,

மதுரை மற்றும் திருச்சி பாஸ்போர்ட் அலுவலகங்களில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து சிலர் பாஸ்போர்ட்டுகளை பெற்றதாக புகார் எழுந்தது. இதுகுறித்து மதுரை கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மதுரையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கி இருந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதில், பணத்துக்காக ஒரு கும்பல் போலி ஆவணங்கள் மூலம் இத்தகைய பாஸ்போர்ட்டுகளை பெற்று தந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக திருச்சியை சேர்ந்த வைத்தியநாதன், மதுரையை சேர்ந்த சுவாமிநாதன், ரமேஷ், அண்ணாதுரை ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர்கள் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்டவைகளை போலியாக தயார் செய்து அந்த ஆவணங்கள் மூலம் பலருக்கு போலி பாஸ்போர்ட் பெற்று தந்துள்ளது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, வைத்தியநாதன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் போலி ஆவணங்கள் தயாரிக்க பயன்படுத்திய அரசு முத்திரைகள் உள்ளிட்ட பல பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதேபோல் திருச்சி மாநகரத்துக்குட்பட்ட பகுதிகளில் ஒரு கும்பல் போலி பாஸ்போர்ட்டுகள் தயாரித்து வருவதாக கியூபிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த கும்பலை ரகசியமாக கண்காணித்தனர். அப்போது மேலசிந்தாமணி பூசாரிதெருவை சேர்ந்த கண்ணையராஜ்(வயது 60), அதேபகுதியை சேர்ந்த பழனிவேல்(50) ஆகியோர் கடையை வாடகைக்கு எடுத்து அங்கு ஜெராக்ஸ் கடை நடத்துவது போல் போலி பாஸ்போர்ட்டுகள் தயாரித்தது தெரியவந்தது.

இதேபோல் காஜாப்பேட்டையை சேர்ந்த முகமதுகாசிம்(52), பெரியமிளகுபாறையை சேர்ந்த செபாஸ்டியன்(35) ஆகியோரும் தங்களது வீட்டில் போலி பாஸ்போர்ட்டுகள் தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து கியூபிரிவு போலீசார் அவர்களுடைய வீடு மற்றும் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு போலி முத்திரைகள், ரப்பர் ஸ்டாம்புகள், போலி பாஸ்போர்ட்டுகள், அதற்குண்டான ஆவணங்கள், பிரிண்டர் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் இருந்தன. அவற்றை போலீசார் பறி முதல் செய்தனர்.

தொடர் விசாரணையில் இவர்கள் 4 பேரும் நீண்டநாட்களாக போலி பாஸ்போர்ட்டுகள் தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இது குறித்து கியூபிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, 4 பேரையும் கைது செய்தனர்.

பின்னர் அவர்களை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 2-ல் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story