கல்பாக்கம் மீனவ கிராமங்களில் அதிகாரிகள் ஆய்வு - தூண்டில் வளைவு அமைத்து தர மீனவர்கள் கோரிக்கை


கல்பாக்கம் மீனவ கிராமங்களில் அதிகாரிகள் ஆய்வு - தூண்டில் வளைவு அமைத்து தர மீனவர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 30 Sept 2019 4:15 AM IST (Updated: 30 Sept 2019 12:06 AM IST)
t-max-icont-min-icon

கல்பாக்கத்தில் உள்ள மீனவ கிராமங்களில் அடிக்கடி கடல் அரிப்பு ஏற்படுவதாக செய்தி வெளியானதையடுத்து, அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

கல்பாக்கம்,

காஞ்சீபுரம் மாவட்டம், கல்பாக்கம் அடுத்து புதுப்பட்டினம் மற்றும் உய்யாலிகுப்பம் ஆகிய மீனவ கிராமங்கள் உள்ளன. கடந்த சில நாட்களாக இந்த மீனவ கிராமங்களை சுற்றியுள்ள பகுதியில், கடல் அலை சீற்றம் அதிகமாக உள்ளது. இதனால் புதுப்பட்டினம் மற்றும் உய்யாலிகுப்பம் பகுதி கடற்கரை ஓரங்களில் அடிக்கடி மணல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அரிப்பு படகு நிறுத்தும் இடம் வரை நீண்டு வருகிறது. இந்த கடல் அரிப்பு குடியிருப்பு பகுதியில் வாழும் மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கி வருகிறது.

இதன் காரணமாக கடல் அரிப்பை தடுக்கும் வகையில், கடலில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, நீலாங்கரை பகுதி மீன்வளத்துறை உதவி இயக்குனர் மோகன்குமார், உதவி ஆய்வாளர் அன்பழகன் மற்றும் மேற்பார்வையாளர் விஜய் உள்ளிட்ட அதிகாரிகள் உய்யாலிகுப்பம், புதுப்பட்டினம் குப்பங்களுக்கு சென்று நேரில் ஆய்வு செய்தனர்.

அப்போது, உய்யாலிகுப்பம் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் ராஜ்குமார், புதுப்பட்டினம் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் சதாசிவம் உள்ளிட்ட மீனவர்கள் அதிகாரிகளை வரவேற்று சந்தித்தனர். அதிகாரிகளிடம் இப்பகுதியில், கடல் அலை சீற்றத்தின் காரணமாக ஏற்படும் மணல் அரிப்பால் படகு நிறுத்தும் இடமும் சேதமடைந்து வருகிறது. எனவே தூண்டில் வளைவு அமைத்து உரிய பாதுகாப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என மீனவர்கள் சார்பாக கோரிக்கை விடுத்தனர். அதிகாரிகளும் மீனவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

Next Story