40 ஆண்டுகளுக்கு முன்பு டென்மார்க் தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்டவர்: பெற்றோரை தேடி அலைந்த பங்கு சந்தை நிறுவன ஊழியர்


40 ஆண்டுகளுக்கு முன்பு டென்மார்க் தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்டவர்: பெற்றோரை தேடி அலைந்த பங்கு சந்தை நிறுவன ஊழியர்
x
தினத்தந்தி 30 Sept 2019 4:30 AM IST (Updated: 30 Sept 2019 12:08 AM IST)
t-max-icont-min-icon

40 ஆண்டுகளுக்கு முன்பு டென்மார்க் தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்டு தற்போது பங்கு சந்தை நிறுவன ஊழியராக உள்ள ஒருவர் தனது பெற்றோரை அம்மாப்பேட்டையில் வீதி,வீதியாக தேடி அலைந்தார்.

அம்மாப்பேட்டை,

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை சின்னகடைத்தெரு பகுதியில் வசித்து வந்தவர் கலியமூர்த்தி. இவருடைய மனைவி தனலட்சுமி. இவர்களுடைய மகன்கள் டேனியல் ராஜன், டேவிட் சாந்தகுமார். குடும்ப வறுமை காரணமாக கலியமூர்த்தி-தனலட்சுமி ஆகியோர் கடந்த 1979-ம் ஆண்டு சென்னையில் டென்மார்க்கை சேர்ந்த 2 தம்பதிகளிடம் தங்களது மகன்களான டேனியல் ராஜன், டேவிட் சாந்தகுமார் ஆகியோரை தத்து கொடுத்தனர்.

டேவிட் சாந்தகுமாரை தத்து எடுத்து டென்மார்க் தம்பதி, அவருடைய பெயரை டேவிட் கில்டென்டல் நெல்சன் என மாற்றினர். தற்போது டேவிட் கில்டென்டல் நெல்சனுக்கு 41 வயதாகிறது. டென்மார்க்கில் பங்கு சந்தை நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது உண்மையான பெற்றோரை பார்க்க விரும்பினார்.

வீதி, வீதியாக அலைந்தார்

இதை தொடர்ந்து அவர், அம்மாப்பேட்டைக்கு வந்தார். நேற்று டேவிட் கில்டென்டல் நெல்சன் அம்மாப்பேட்டையில் தனது பெற்றோரை தேடி வீதி,வீதியாக அலைந்தார். பெற்றோரின் புகைப்படத்தை, அம்மாப்பேட்டை பகுதி மக்களிடம் காண்பித்து இவர்களை பார்த்திருக்கிறீர்களா? என கேட்டறிந்தார். மேலும் அம்மாப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்துக்கு சென்று அங்கிருந்த பதிவேடுகளை பார்வையிட்டு பெற்றோர் பற்றிய விவரங்கள் உள்ளதா? என பார்த்தார். ஆனால் பெற்றோர் பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை. 40 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோரை தேடி வீதி, வீதியாக அலைந்த டேவிட் கில்டென்டல் நெல்சனின் பாச உணர்வு அந்த பகுதியினரை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

பங்கு சந்தை நிறுவன ஊழியர்

இதுபற்றி டேவிட் கில்டென்டல் நெல்சன் கூறியதாவது:-

எனக்கு ஒரு வயது இருக்கும் 1979-ம் ஆண்டு சென்னை பல்லாவரத்தில் உள்ள ஒரு தொண்டு நிறுவனம் மூலம் டென்மார்க்கை சேர்ந்த டானிஸ் என்பவருக்கு எனது பெற்றோர் தத்து கொடுத்துள்ளனர். தற்போது டென்மார்கில் உள்ள ஒரு பங்கு சந்தை நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். எனக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். கடந்த 2013-ம் ஆண்டு சென்னையில் எனது நண்பர் ஒருவரை சந்திக்க வந்தேன்.

அப்போது எனது உருவ அமைப்பு தமிழர்களை போல் இருப்பதை உணர்ந்தேன். அதன் பிறகு டென்மார்க் சென்று அங்குள்ள பெற்றோரிடம் விவரம் கேட்டேன். அப்போது அவர்கள் தமிழகத்தில் இருந்து என்னை தத்தெடுத்ததாக கூறினர்.

நம்பிக்கை உள்ளது

இதை தொடர்ந்து எனது பெற்றோரை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் அவர்களை தேட தொடங்கினேன். 2017-ம் ஆண்டு புனேயில் குழந்தைகள் பாதுகாப்பு தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தி வரும் அருண் டோஹ்லி என்பவர் மூலம் 40 ஆண்டுகளுக்கு முன்பாக எடுக்கப்பட்ட எனது குடும்பத்தினரின் புகைப்படமும், எனது பிறப்பு சான்றும் கிடைத்தது.

மேலும் எனது அண்ணனும் தத்து கொடுக்கப்பட்ட விவரமும் அப்போது தான் தெரியவந்தது. எனது பெற்றோரையும், டென்மார்க்கில் உள்ள எனது அண்ணனை எப்படியாவது சந்தித்து விடுவேன் என நம்பிக்கை உள்ளது என்றார். 

Next Story