என்.ஆர்.காங்கிரசில் வேட்பாளரை தேர்வு செய்வதில் இழுபறி


என்.ஆர்.காங்கிரசில் வேட்பாளரை தேர்வு செய்வதில் இழுபறி
x
தினத்தந்தி 30 Sept 2019 5:00 AM IST (Updated: 30 Sept 2019 1:27 AM IST)
t-max-icont-min-icon

காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது.

புதுச்சேரி,

காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி அமைதியாக இருந்து வந்தார். இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் தலைவர் ரங்கசாமியை சந்தித்து பேசினார்கள்.

அப்போது காமராஜ் நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் போட்டியிட வேண்டும், இல்லை என்றால் நமது கட்சி தொண்டர்கள் சோர்ந்து போவார்கள். முக்கிய நிர்வாகிகள் சிலர் கட்சியை விட்டு செல்லவும் வாய்ப்பு உள்ளது. 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நாம் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் முக்கியம் என்று அறிவுறுத்தினர்.

இதனை தொடர்ந்து ரங்கசாமி, சென்னை சென்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அதன் பின்னர் காமராஜ் நகர் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி போட்டியிட அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்தது. இதனை தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. நேரு போட்டியிடுவார் என்று சூசகமாக தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் அந்த தொகுதியில் உள்ள முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினர்.

இதற்கிடையே காமராஜ் நகர் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் எம்.பி. ராதாகிருஷ்ணனை களமிறக்கினால் வெற்றி வாய்ப்பு இருக்கும் என கருதி அதற்கான வேலை நடப்பதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த நேரு, ரங்கசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்.

இதற்கிடையே நேற்று நள்ளிரவு வரை தனியார் ஓட்டலில் ரங்கசாமி கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இதிலும் இறுதி முடிவு எடுக்கப்பட்டு வேட்பாளர் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

Next Story