பெங்களூருவில், போதைப்பொருள் விவகாரத்தில் சூடான் நாட்டு மாணவர் கத்தியால் குத்தி கொலை; 3 பேரை பிடித்து போலீஸ் விசாரணை


பெங்களூருவில், போதைப்பொருள் விவகாரத்தில் சூடான் நாட்டு மாணவர் கத்தியால் குத்தி கொலை; 3 பேரை பிடித்து போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 30 Sept 2019 4:00 AM IST (Updated: 30 Sept 2019 1:53 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் போதைப்பொருள் விவகாரத்தில் சூடான் நாட்டு மாணவர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

பெங்களூரு,

சூடான் நாட்டை சேர்ந்தவர் கிரஷ் என்ற வொன்யா டூக்(வயது 25). இவர், பெங்களூருவில் தங்கி இருந்து தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கே.ஜி.ஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சாம்புரா பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளம் அருகே கிரஷ் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் சிலர், கிரசுடன் சண்டை போட்டதாக தெரிகிறது. பின்னர் திடீரென்று ஆத்திரமடைந்த மர்மநபர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் கிரசை குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்கள்.

இதில், பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். உடனடியாக கிரசை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் கே.ஜி.ஹள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கும், மருத்துவ மனைக்கும் சென்று விசாரித்தனர். இதற்கிடையில், மருத்துவமனையில் கிரசுக்கு, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்து விட்டார்.

கிரசுக்கு போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் கிரஷ் மற்றும் மர்மநபர்கள் இடையே போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக சண்டை நடந்ததும், அப்போது ஆத்திரமடைந்த மர்மநபர்கள் கிரசை கத்தியால் குத்திக் கொன்றதும் தெரியவந்தது. இதுகுறித்து கே.ஜி.ஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

அதே நேரத்தில் கிரஷ் கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து கே.ஜி.ஹள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story