ஹாசன் அருகே தனியார் சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்தது; டிரைவரின் சாமர்த்தியத்தால் 30 பேர் உயிர் தப்பினர்


ஹாசன் அருகே தனியார் சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்தது; டிரைவரின் சாமர்த்தியத்தால் 30 பேர் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 30 Sept 2019 4:15 AM IST (Updated: 30 Sept 2019 1:56 AM IST)
t-max-icont-min-icon

ஹாசன் அருகே தனியார் சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்தது. டிரைவரின் சாமர்த்தியத்தால் 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ஹாசன்,

பெங்களூருவில் இருந்து உடுப்பி மாவட்டம் பைந்தூர் நோக்கி நேற்று முன்தினம் இரவு தனியார் சொகுசு பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சில் 30 பயணிகள் இருந்தனர். அந்த பஸ் நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் ஹாசன் அருகே சாந்திகிராமம் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது பயணிகள் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர்.

அந்த சமயத்தில் பஸ்சின் என்ஜினில் இருந்து புகை வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த டிரைவர், பஸ்சை சாலையோரம் நிறுத்திவிட்டு இறங்கி பார்த்தார். அப்போது என்ஜினில் தீப்பிடித்தது. இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக பஸ்சில் இருந்த பயணிகளை இறக்கினார்.

பஸ்சில் தீப்பிடிப்பதை அறிந்ததும் பயணிகள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கினார்கள். இதையடுத்து தீ, பஸ்சின் அனைத்து பகுதிகளுக்கும் பரவி மளமளவென கொழுந்துவிட்டு எரிந்தது. இதுகுறித்து பஸ் டிரைவர், சாந்திகிராமம் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து, போராடி தீயை அணைத்தனர்.

ஆனாலும் அதற்குள் பஸ் முழுவதும் எரிந்து எலும்புக்கூடானது. டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு பயணிகளை கீழே இறக்கியதால் 30 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இதையடுத்து வேறொரு பஸ் வரவழைக்கப்பட்டு அவர்கள் 30 பேரும் பைந்தூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சாந்திகிராமம் போலீசார் விபத்துக்குள்ளான பஸ்சை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

இதுகுறித்து சாந்திகிராமம் போலீசார் நடத்திய விசாரணையில், பஸ்சில் ஏற்பட்ட மின்கசிவால் தீப்பிடித்து எரிந்ததாக தெரிவித்தனர். இதுதொடர்பாக சாந்திகிராமம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story