குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை


குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
x
தினத்தந்தி 29 Sep 2019 10:15 PM GMT (Updated: 29 Sep 2019 8:43 PM GMT)

குற்றாலம் அருவியில் நேற்று மதியம் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

தென்காசி, 

பிரசித்திபெற்ற சுற்றுலா தலமான குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த ஆண்டு சீசன் தாமதமாக தொடங்கியது. சீசன் காலங்கள் முடிந்த பிறகும் அருவிகளில் தண்ணீர் விழுந்து கொண்டே இருக்கிறது.

இந்த மாதம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் தினமும் குற்றாலத்துக்கு வந்து ஆனந்தமாக குளித்து செல்கின்றனர்.

இடையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுந்ததால் கூட்டம் இன்றி சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியாக குளித்து சென்றனர்.

நேற்று காலை அருவிகளில் தண்ணீர் மிதமாக விழுந்தது. இதில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்தனர். தற்போது பள்ளிகளில் காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்தனர். பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி ஆகிய அருவிகளில் ஆனந்தமாக குளித்தனர்.

இதற்கிடையே மலைப்பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக, நேற்று மதியம் 2.30 மணியளவில் மெயின் அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. உடனே அங்கு குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை போலீசார் வெளியேற்றினர். மேலும் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்ற அருவிகளுக்கு படையெடுத்தனர்.

Next Story