வேலை வாங்கி தருவதாக கூறி பெண்களிடம் நகை மோசடியில் ஈடுபட்டவர் கைது
வேலை வாங்கி தருவதாக கூறி பெண்களிடம் நகை மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.
மூங்கில்துறைப்பட்டு,
திருக்கோவிலூர், சங்கராபுரம், மூங்கில்துறைப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பெண்களிடம் சத்துணவு பொறுப்பாளர், சமையலர் மற்றும் உதவியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் நகைகளை பெற்று மோசடி செய்து விட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் பெண்களிடம் நகைகளை மோசடி செய்தவரை பிடிக்க திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் நகைகளை பெற்று மோசடி செய்த நபர் திருவண்ணாமலையில் இருந்து மூங்கில்துறைப்பட்டு வழியாக கள்ளக்குறிச்சிக்கு செல்வதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்படையினர் மூங்கில்துறைப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் மூங்கில்துறைப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக ஸ்கூட்டரில் வந்தவரை மறித்து சோதனை செய்தனர். அதில் அவரிடம் 27 பவுன் நகைகள், 20 செல்போன்கள் மற்றும் பல்வேறு ஆதார் அட்டைகள் இருந்தன. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் வேலூர் மாவட்டம் சாய்நாதபுரம் கலைவாணர் நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சேகர் (வயது 44) என்பதும், திருக்கோவிலூர், சங்கராபுரம் பகுதி பெண்களிடம் வேலை வாங்கி தருவதாக கூறி நகைகளை பெற்று மோசடியில் ஈடுபட்டதும், பல வீடுகளின் பூட்டை உடைத்து நகைகள் திருடியதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சேகரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 27 பவுன் நகைகள், 20 செல்போன்கள், ஸ்கூட்டர் ஆகியவை மீட்கப்பட்டன.
இதற்கிடையே பெண்களிடம் நகைகளை வாங்கி மோசடி செய்தவரை பிடித்த போலீசாரை, போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பாராட்டினார்.
Related Tags :
Next Story