‘புதிதாக கட்டப்படும் வீடு, கடைகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அவசியம்’ - சிவகாசி நகராட்சி கமிஷனர் அறிவுறுத்தல்
சிவகாசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிதாக கட்டப்படும் வீடு மற்றும் கடைகளில் மழை நீர் சேகரிப்பு தொட்டிகளை கண்டிப்பாக அமைக்க வேண்டும் என்று நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி வலியுறுத்தினார்.
சிவகாசி,
சிவகாசி நகராட்சி நிர்வாகம் மற்றும் சிவகாசி பசுமை மன்றம் ஆகியவை சார்பில் நீர் மேலாண்மை-ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் 100 சதவீதம் மழைநீர் சேகரிப்பு, வடி தொட்டி செயல்முறை கருத்தரங்கம் மற்றும் பயிற்சி முகாம் சிவகாசியில் நடைபெற்றது. இதில் நகராட்சி என்ஜினீயர் ராமலிங்கம் வரவேற்று பேசினார். நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
சிவகாசி நகராட்சி பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் 500 அடிக்கு கீழ் சரிந்துவிட்டது. இதனால் குடிநீர் கிடைப்பதில் சிறிதளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் காலப்போக்கில் குடிநீருக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். எனவே நாம் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த தொடங்க வேண்டும். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வீடு, கடை, அலுவலகங்களில் மழை நீர் சேகரிப்பு தொட்டியை அமைத்து அதில் முறையாக மழை நீரை சேகரிக்க வேண்டும். இது மிகவும் அவசியமாகும். இவ்வாறு சேகரிக்கப்படும் மழை நீர் ஆண்டு முழுவதும் பயன்படுத்தும் வசதி தற்போது உள்ளது. எனவே பொதுமக்கள் மழைநீர் சேகரிப்பில் அதிக ஆர்வத்துடன் இருக்க வேண்டும். அதே நேரத்தில் குடிநீரை சிக்கனமாகவும் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் சிவகாசி நகராட்சி முன்னாள் துணைத்தலைவர் அரசன் அசோகன், நகராட்சி பொறியாளர் பிரிவு அதிகாரிகள் முத்து, ஹசினா, ஜான்சி, நகராட்சி தூதுவர் கிரிதரன், சிவகாசி பசுமை மன்ற தலைவர் சுரேஷ்தர்கர், இயற்கை ஆர்வலர் மாறன்ஜி உள்பட பலர் கலந்து கொண்டு மழைநீர் சேகரிப்பு குறித்தும் அதனை பயன்படுத்தும் முறை குறித்தும் பேசினர்.
முடிவில் நகராட்சி நகரஅமைப்பு ஆய்வாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியின் போது 100 சதவீதம் மழை நீர் சேமிப்பு வடிதொட்டியின் மாதிரி வைக்கப்பட்டிருந்தது.
புதிய கட்டிடங்களில் மழைநீர் சேமிப்பு தொட்டிகள் எவ்வாறு அமைக்கப்படுகிறது என்பது வீடியோ மூலம் விளக்கப்பட்டது.
Related Tags :
Next Story